நெல்லை: பட்டியலினத்தவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய பட்டியலின நல ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 30ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே மணிமூர்த்தீஸ்வரர் ஆற்றில் குளிக்கச்சென்ற மணிமூர்த்தீசுவரம் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன இளைஞர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியதோடு, பணத்தை பறித்துக் கொண்டதோடு அவர்கள் மீது சிறுநீர் கழித்து கஞ்சா போதைக் கும்பல் அட்டூழியம் செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நெல்லை மணி மூர்த்தீஸ்வரர் தாமிரபரணி ஆற்றில் பட்டியலின இளைஞர்கள் 6 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆற்றுப்பகுதியில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தலைமையிலான குழு நேரில் ஆய்வு நடத்தி வருகிறது.
தேசிய பட்டியலினத்தோருக்கான நல ஆணையர் ரவி வர்மன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் கேட்டது. பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவர்களை சந்தித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
The post நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய பட்டியலின நல ஆணையர் நேரில் விசாரணை..!! appeared first on Dinakaran.