×

பாதுகாப்பாக தீபாவளி பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள் என்ன? தீயணைப்புத்துறை, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு தீ விபத்து ஏற்படாத வகையில்

வேலூர், நவ. 7: தீபாவளிக்கு தீ விபத்து ஏற்படாத வகையில், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள் குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடு முழுவதும் வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு கடைகளுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தீயணைப்புதுறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் உத்தரவின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் மற்றும் தீ தடுப்பு குழு சார்பில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகின்றனர்.

அதன்படி காட்பாடி தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் பால்பாண்டி, முருகேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து நேற்று ரயில் நிலைத்தில் பயணிகளிடம், ரயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது, விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது. தண்ணீர் நிறைந்த தொட்டி அருகில் இருக்கவேண்டும். தீயில் கருகாத மேலாடை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். மத்தாப்பு, சங்கு சக்கரம் பற்ற வைக்கும்போது, நீளமான குச்சியை முனையில் வைத்து பற்ற வைக்கவேண்டும். வெடிக்காத பட்டாசுகளை பிரித்து தீயில் பற்ற வைக்ககூடாது. டிபன், பாட்டில்களில் வைத்து பட்டாசுகள் வெடிக்க கூடாது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கவோ, மீண்டும் பற்ற வைக்கவோ கூடாது, ராக்கெட் பட்டாசுகளை கேஸ் சிலிண்டர்கள், உணவு சேமிப்பு கிடங்கு போன்ற இடங்களில் வைக்கக்கூடாது. தீவிபத்து ஏற்பட்டால் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post பாதுகாப்பாக தீபாவளி பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள் என்ன? தீயணைப்புத்துறை, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு தீ விபத்து ஏற்படாத வகையில் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Vellore ,Fire Department ,Railway Police Awareness Fire Prevention ,Dinakaran ,
× RELATED வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து...