×

குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜரானார் குடிகாரன், பெண் வெறியனுடன் வாழ விருப்பம் இல்லை

காரைக்கால், நவ. 7: குடிகாரன், பெண் வெறியனுடன் வாழ விருப்பம் இல்லையென மாஜி அமைச்சர் சந்திரபிரியங்கா விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரபிரியங்கா(33). காரைக்கால் நெடுங்காடு (தனி) சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே அவரது செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த முதல்வர் ரங்கசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் பதவியில் இருந்து சந்திரபிரியங்காவை அதிரடியாக நீக்கினார்.அதே நேரத்தில், கணவர் சண்முகத்துடனும் கடந்த சில மாதங்களாககருத்து வேறுபாடு ஏற்பட்டு சந்திரபிரியங்கா பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த மாதம் 14ம் தேதி 17 காரணங்களை குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் சண்முகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இது ஒரு பக்கம் இருக்கும்போது, தனது கணவர் சண்முகம் தனக்கு தொலைபேசி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் டிஜிபிடம் புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருந்தார். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா எம்எல்ஏ காரைக்கால் குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2009ம் சண்முகத்துடன் திருமணம் நடைபெற்றது. திருச்சியில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். 12 மற்றும் 9 வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளது. திருமணத்துக்கு பிறகு எனது தந்தை சந்திரகாசு சண்முகத்துக்கு காரைக்காலில் வேலை வாங்கி கொடுத்ததால் நெடுங்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி விட்டோம். பின்னர் எனது தந்தை சந்திரகாசு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனதாகவும், தொடர்ந்து 2021ம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

தனது அமைச்சர் பதவியை கணவர் சண்முகம் தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டார். இதனை தட்டி கேட்டதால், அதிகார வட்ட நண்பர்கள் மற்றும் தரகர்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சண்முகம் முயற்சி செய்தார். நான் அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த கணவர் சண்முகம், தன்னை பல்வேறு வகையில் கட்டுப்படுத்தினார். மேலும் நிர்வாகம், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கட்சி செயல்பாடுகளில் தலையீட்டை தவிர்க்குமாறு தனது கணவரிடம் கூறினேன். ஆனால் கணவர் சண்முகம் கேட்கவில்லை.

தனது பெயருக்கு களங்கம் விளைவித்து மனதளவில் துன்புறுத்தினார். இது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துவிட்டது. மேலும் குடிகாரன், பெண் வெறியன், ஆண் பேரினவாதி மற்றும் தன்னைப்பற்றி கிசுகிசுக்களை வெளியே பரப்பும் மற்றும் பேசும் ஒரு கணவருடன் வாழ விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்ய வந்த சந்திரபிரியங்கா எம்எல்ஏ வந்த போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் சந்திரபிரியங்கா நேரடியாக குடும்ப நல நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜரானார் குடிகாரன், பெண் வெறியனுடன் வாழ விருப்பம் இல்லை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Former Minister ,Chandrapriyanka ,Family Welfare Court ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...