×

புதுவையில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு முன்னாள் அமைச்சர் கண்ணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

புதுச்சேரி, நவ. 7: நுரையீரல் தொற்று பாதிக்கப்பட்ட உயிரிழந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருவடிக்குப்பம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் (74). இவர் ரத்த அழுத்த குறைவு, நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக மூலகுளம் தனியார் மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு கதறினர். கண்ணனின் உடல் இறுதி அஞ்சலிக்காக நேற்று காலை வைசியால் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், பாஜக தலைவர் செல்வகணபதி எம்பி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, விஸ்வநாதன், அதிமுக செயலாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன், பாமக அமைப்பாளர் கணபதி மற்றும் எம்எல்ஏக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு, கண்ணனின் உடல் வீட்டிலிருந்து ஊர்வலமாக கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு ஆட்சியர் வல்லவன் தலைமையில் போலீசாரின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே முன்னாள் அமைச்சர் கண்ணனின் மறைவையொட்டி நேற்று முதல் நாளை (8ம் தேதி) வரை 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சட்டசபை, கவர்னர் மாளிகை மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இருந்தன. மேலும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post புதுவையில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு முன்னாள் அமைச்சர் கண்ணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Former Minister ,Kannan ,Puducherry ,ex-minister ,
× RELATED புதுவையில் ஆன்லைனில் 9 பேரிடம் நூதன மோசடி