×

தெலங்கானாவில் அனல்பறக்கும் பிரசாரம்: கேசிஆருக்கு பயம் காட்டும் காங்கிரஸ்; களத்தில் குதித்த விஐபிக்கள்

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் இன்று வரை முதல்வர் கே.சந்திரசேகரராவ் தான். பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவர். இரண்டு முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எளிதாக வென்று விட்டார். ஆனால் இந்த முறை அத்தனை சுலபமல்ல. முதல்வர் கேசிஆர் பேச்சு, செயல்கள் அனைத்தும் அவர் பதற்றத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. காரணம் காங்கிரஸ். எப்போதும் இல்லாதவகையில் இப்போது தெலங்கானாவில் அதீத உற்சாகத்தில் காங்கிரஸ் தேர்தல் களத்தில் பணி செய்து வருகிறது. கருத்துக்கணிப்புகளும் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 65 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளன.

ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராக இருந்த மறைந்த ஒய்எஸ்.ராஜசேகர ரெட்டி மகள் ஒய்.எஸ்.சர்மிளா தலைமையிலான ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் முதல்வர் கேசிஆருக்கு எதிரான வாக்குகள் பிரிவதை விரும்பாததால் காங்கிரசுக்கு ஆதரவு என்றும் அறிவித்து விட்டது. இது காங்கிரசுக்கு கூடுதல் பலம். மத்தியில் ஆளும் பா.ஜவும் தன்பங்கிற்கு தெலங்கானாவில் பலம் காட்டுகிறது. இதனால் தெலங்கானா தேர்தல்களம் அனல் பறக்கிறது. விஐபி தொகுதிகளை கீழே காணலாம்.

1. காஜ்வெல்: முதல்வர் சந்திரசேகரராவ் தொகுதி. 2 முறையும் அவரே அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜ சார்பில் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து விலகியவரும், தெலங்கானாவின் முதல் நிதியமைச்சர் மற்றும் 2019 முதல் 2021 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவருமான எட்லா ராஜேந்தர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் 2014ல் கேசிஆரை எதிர்த்து தோல்வி அடைந்த தம்குண்ட்லா நரசா ரெட்டி மீண்டும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் முதல்வர் சந்திரசேகரராவ் காஜ்வெல் தொகுதியிலும் போட்டியிடுகிறார். பா.ஜ சார்பில் வெங்கடரமணா ரெட்டி அங்கு நிறுத்தப்பட்டுள்ளார்.

2. சிர்சில்லா: முதல்வர் கேசிஆர் மகனும், தொழில்துறை அமைச்சருமான கேடி ராமாராவ் இங்கு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ சார்பில் ராணி ருத்ரமா ரெட்டி இங்கு நிறுத்தப்பட்டுள்ளார்.

3. ஹஸ்னாபாத்: காங்கிரஸ் செயல் தலைவர் பூனம் பிரபாகர் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். பிஆர்எஸ் கட்சி சார்பில் சதிஷ்குமார் போட்டியிடுகிறார்.

4. மேடக்: பிஆர்எஸ் கட்சியின் மூத்த பெண் தலைவர், முதல் துணை சபாநாயகர் பத்மா தேவேந்தர் ரெட்டி இங்கு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மைனபள்ளி ரோகித் ராவ், பா.ஜ சார்பில் பஞ்சா விஜய்குமார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

5. அண்டோல்: ஒன்றுபட்ட ஆந்திராவில் 2011 முதல் 2014 வரை துணை முதல்வர் பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர் தாமோதர் ராஜா இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து ஆளும் பிஆர்எஸ் கட்சி சார்பில் சாண்டி கிராந்தி கிரண், பாஜ சார்பில் பிரபல நகைச்சுவை நடிகர் பாபு மோகன் நிறுத்தப்பட்டுள்ளார்.

6. மல்காஜ்கிரி: பிஆர்எஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மைனபள்ளி ஹனுமந்தராவ் திடீரென கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து அங்கும் இதே தொகுதியில் சீட் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து மாரி ராஜசேகர ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

7. குத்புல்லாபூர்: காங்கிரசில் இருந்து விலகி 2021ல் பா.ஜவில் இணைந்த குணா சிரிசைலம் கவுட் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். பிஆர்எஸ் சார்பில் தற்போதைய எம்எல்ஏ கேபி விவேகானந்தாவும், காங்கிரஸ் சார்பில் கொல்லன் ஹனுமந்த் ரெட்டியும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

8. ஜூபிலிஹில்ஸ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இங்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பிஆர்எஸ் சார்பில் மகந்தி கோபிநாத், பா.ஜ சார்பில் லங்கலா தீபக் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளனர்.

9. செகந்திராபாத்: தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் பத்மராவ் கவுடு இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆதம் சந்தோஷ்குமார், பா.ஜ சார்பில் மேகலா சாரங்கபாணி நிறுத்தப்பட்டுள்ளனர்.

10. கோடங்கல்: தெலங்கானா காங்கிரஸ் தலைவர், மல்காஜிகிரிதொகுதிஎம்பியுமான ரேவந்த் ரெட்டி இங்கு களம் இறங்கப்பட்டுள்ளார். பிஆர்எஸ் சார்பில் பட்னம் நரேந்திரரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

11. ஹசூர்நகர்: நல்கொண்டா தொகுதி காங்கிரஸ் எம்பி நல்லமடா உத்தம் குமார் ரெட்டி இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். பிஆர்எஸ் கட்சி சார்பில் ஷனம்புடி சாய்திரெட்டியும், பா.ஜ சார்பில் சல்லா லதா ரெட்டியும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

12. நல்கொண்டா: புவனகிரி காங்கிரஸ் எம்பி கேமட்டி ரெட்டி வெங்கட்ரெட்டி இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். பிஆர்எஸ் சார்பில் காஞ்சார்லா பூபால் ரெட்டி, பா.ஜ சார்பில் மடாகினி னிவாஸ் கவுட் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர ஒய்எஸ்ஆர் ஆட்சியில் ஆந்திராவில் பிரபலமாக இருந்த மல்லுபாட்டி விக்ரமர்கா, தன்சாரி அனுசுயா என்கிற சீதாக்கா மற்றும் ஜக்கா ரெட்டி, பூனம் பிரபாகர் உள்ளிட்டோரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

* காலேஸ்வரம் அணை பிரச்னை
தெலங்கானாவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பில் காலேஸ்வரம் அணை கட்டப்பட்டது. இதில் சில தூண்கள் இடிந்தது. இதை தேர்தல் பிரச்னையாக காங்கிரஸ், பா.ஜ மாற்றி உள்ளது. அணையை பார்க்க வரமுடியுமா என்றார் கேசிஆர் மகன் ராமராவ். பிரசாரத்திற்கு வந்த ராகுல் உடனே காலேஸ்வரம் அணையை பார்வையிட்டு சேதம் பற்றிய படத்தை வெளியிட்டார். பா.ஜவும் தன் பங்கிற்கு ஒன்றிய குழுவை அனுப்பி வைத்து உபயோகமற்றது என்று விமர்சனம் செய்துள்ளது.

முக்கிய அமைச்சர்களை எதிர்க்கும் தலைகள்
தொகுதி அமைச்சர்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் பா.ஜ வேட்பாளர்கள்
1. அடிலாபாத் ஜோகு ராமண்ணா (வனத்துறை) கண்டி ஸ்ரீனிவாஸ்ரெட்டி பாயல் சங்கர்
2. நிர்மல் அலோலா இந்திரகரண் ரெட்டி (சட்டத்துறை) குச்சடி ஸ்ரீஹரிராவ் ராமராவ் பட்டேல்
3. தர்மாபுரி கொப்புலா ஈஸ்வர் (பிற்பட்டோர் நலத்துறை) அட்லுரி லட்மண் ராவ் சோகலா குமார்
4. கரீம்நகர் கங்குலா கமலாகர் (உணவுத்துறை) — பாண்டி சஞ்சய்குமார்
5. சித்திபெட் ஹரிஷ்ராவ் (சுகாதாரத்துறை) பூஜாலாஹரிகிருஷ்ணா —
6. மேச்சல் சமக்குரா மல்லா ரெட்டி (தொழிலாளர் நலத்துறை) தொட்டகுந்தா விஜ்ரேஷ் யாதவ் —
7. மாகேஷ்வரம் சபிதா இந்திரா ரெட்டி (கல்வி) கிச்சனாகிரி லட்சுமண ரெட்டி அண்டேலா ஸ்ரீராமலு யாதவ்
8. சனத்நகர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் (மீன்வளம், கால்நடைத்துறை) கோட்டா நீலிமா —
9. மெகபூப்நகர் ஸ்ரீனிவாஸ் கவுட் (விளையாட்டுத்துறை) யேனம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி மிதுன்குமார் ரெட்டி
10. வனபார்த்தி சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி (விவசாயத்துறை) கிலோலா சின்னா ரெட்டி அஸ்வத்தமா ரெட்டி
11. சூர்யபேட் குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி (எரிசக்தித்துறை) — சான்கினேனி வெங்கடேஸ்வரராவ்
12. பாலகுர்த்தி எரபள்ளி தயாகர் ராவ் (பஞ்சாயத்துராஜ்) யஷ்கஷ்வானி மிமிடிலா லெகா ராம்மோகன் ரெட்டி
13. கானம் அமைச்சர் பவடா அஜய்குமார் (போக்குவரத்துத்துறை) தமலா நாகேஸ்வரராவ் —

The post தெலங்கானாவில் அனல்பறக்கும் பிரசாரம்: கேசிஆருக்கு பயம் காட்டும் காங்கிரஸ்; களத்தில் குதித்த விஐபிக்கள் appeared first on Dinakaran.

Tags : Congress ,KCR ,K.Chandrasekhara Rao ,Chief Minister ,Telangana ,Bharat Rashtriya Samiti party ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...