×

மாலத்தீவு கடலோர காவல்படை கைது செய்துள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரை அபராதமின்றி விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த 12 மீனவர்கள் ‘ஹோலி ஸ்பிரிட்’ என்ற படகில் கடந்த 22ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகின் ஓட்டுநருக்கு, கடந்த 1.11.2023 அன்று, மாலத்தீவு குடியரசின் மீன்வளம், கடல் வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகம், மாலத்தீவின் பணமதிப்பில் 42,00,000, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடியே 25 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் மேற்படி அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும், அதுவரை அந்த மீன்பிடி படகு மாலத்தீவு காவல் படையினரின் வசம் இருக்கும் என்றும் மாலத்தீவு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும், மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்த அபராத தொகை மிக அதிகமானது. அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. இது அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நிரந்தரமாக வறுமையில் தள்ளிவிடும்.

மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் பிரச்னையில், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, மீன்பிடி படகிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அந்த மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும் என நம்புகிறேன்.

The post மாலத்தீவு கடலோர காவல்படை கைது செய்துள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரை அபராதமின்றி விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Maldivian Coast Guard ,Chief Minister ,M.K.Stal ,Union Minister ,Jaishankar ,Chennai ,Tamil Nadu ,Maldives Coast Guard ,Tamil ,Nadu ,CM ,Dinakaran ,
× RELATED மக்கள் நம்பிக்கை வைத்து...