×

8 இடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் (48). இவர், குடி பழக்கம் உடையவர். மது அருந்திவிட்டால் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து, ‘‘எனக்கு நெஞ்சு வலிக்கிறது. உடல் நிலை சரியில்லை. உடனே வாருங்கள்’’ என்று கூறுவது வழக்கம். 108க்கு போன் செய்தால் அது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குத்தான் செல்லும். அங்கிருந்துதான் எங்கு செல்ல வேண்டும்? என்பதை ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 108 ஆம்புலன்சிற்கு கணேசன் போன் செய்தார். தனக்கு நெஞ்சு வலிக்கிறது. ஆம்புலன்ஸ் அனுப்பி வையுங்கள் என கூறியுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

எனவே தொடர்ந்து 3 முறை கணேசன் போன் செய்தார். மீண்டும் 4வது முறையாக போன் செய்து, ‘‘எனக்கு நெஞ்சுவலி என்றால் ஆம்புலன்ஸ் வருவதில்லை. நான் முதலமைச்சர் வீடு உட்பட 8 இடங்களில் சென்னையில் குண்டு வைத்துள்ளேன். இது சில மணி நேரங்களில் வெடிக்கும்’’ என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் காவல்துறைக்கு இது குறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து ஊட்டி எஸ்பிக்கு தகவல் அளிக்கப்பட்டது. நீலகிரி எஸ்பி சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், லவ்டேல் போலீசார் விசாரணை நடத்தி கணேசன்தான் போன் செய்து மிரட்டியதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள் தாம்பட்டி பகுதிக்கு சென்று கணேசனை கைது செய்தனர்.

The post 8 இடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ganesan ,Tambatti ,Nilgiris ,Dinakaran ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...