×

வருமானத்திற்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து குவிப்பு அதிமுக மாஜி அமைச்சர் அன்பழகன் குடும்பத்தினருடன் நீதிமன்றத்தில் ஆஜர்: விசாரணை தொடங்கியது

தர்மபுரி: வருமானத்திற்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ உள்பட குடும்பத்தினர், உறவினர்கள் 11 பேர் தர்மபுரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோட அள்ளியைச் சேர்ந்தவர் கே.பி.அன்பழகன்(64). தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரான இவர், கடந்த அதிமுக ஆட்சியில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே 4 முறை எம்எல்ஏ, 2 முறை அமைச்சராக இருந்த இவர், தற்போது பாலக்கோடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், மோளையானூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், கடந்த 2016-2021 வரை, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறியிருந்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி.அன்பழகன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 58 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.2 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்து, அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கியது.

முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா(56), மகன்கள் சசிமோகன்(30), சந்திரமோகன்(33), உறவினர்கள் ரவிசங்கர்(45), சரவணன்(47), சரவணக்குமார்(41), மாணிக்கம்(62), மாணிக்கம் மனைவி மல்லிகா(56), தனபால்(45), சரஸ்வதி பச்சியப்பன் எஜூகேசன் அறக்கட்டளை நிர்வாகி ஆகிய 11 பேர் மீது, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மே 22ம் தேதி, 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். பின்னர் வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சம்மன் விநியோகம் செய்யப்பட்டுதர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை தொடங்கியது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உட்பட 11 பேர், நீதிபதி மணிமொழி முன்னிலையில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 22ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

* கொலை மிரட்டல் வருகிறது புகார் கொடுத்தவர் பரபரப்பு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், மோளையானூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான கிருஷ்ணமூர்த்தி, நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் மோளையானூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரான பழனியப்பனுடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையறிந்த பாலக்கோடு அதிமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தான் அமைச்சராக வேண்டும் என்பதற்காக என்னை பயன்படுத்தி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பழனியப்பன் மீது புகார் கொடுக்க வைத்தார். அவரது ஏற்பாட்டின் பேரில், சென்னை தலைமை செயலகத்தில் ஜெயலலிதா கண்ணெதிரிலேயே நானும், எனது மனைவியும் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தோம்.

இதன்மூலம் பழனியப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கே.பி.அன்பழகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால், அமைச்சரான பிறகு, எந்தவொரு உதவியையும் செய்யாமல் இறுதிவரை என்னை ஏமாற்றி விட்டார். கட்சிக்காரர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து மக்களுக்கும், கட்சிக்கார்களுக்கும் தெரியப்படுத்தவே, அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சொத்து குவிப்பு குறித்து புகார் அளித்தேன். அதன்படி, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. எனக்கோ, எனது குடும்பத்திற்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், கே.பி.அன்பழகன் உள்பட 11 பேர் தான் காரணம். இதுகுறித்து தர்மபுரி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post வருமானத்திற்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து குவிப்பு அதிமுக மாஜி அமைச்சர் அன்பழகன் குடும்பத்தினருடன் நீதிமன்றத்தில் ஆஜர்: விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Anbazagan ,Dharmapuri ,KP Anbazhakan ,MLA ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி