×

போக்குவரத்து போலீஸ் நடவடிக்கையால் தி.நகர் வாணி மஹால் சிக்னலில் நெரிசலின்றி செல்லும் வாகனங்கள்: போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: தி.நகர் சென்னையின் வர்த்தக பகுதியாக உள்ளது. துணிகள், நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க என அனைத்துக்கும் பொதுமக்கள் தி.நகர் பகுதிக்கு தான் வருகின்றனர். இதனால் தி.நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அதேபோல் வாகனங்கள் நிறுத்த கூட இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் தி.நகரை சுற்றி சுற்றி வரும் நிலை உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் மற்றும் துணிகள் வாங்க வரும் பொதுமக்கள் எளிமையாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றி வந்து செல்லும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

இதற்காக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறித்து அந்த பகுதிகளில் போக்குவரத்து சரிசெய்ய தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் மகேஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி துணை கமிஷனர் மகேஷ்குமார், போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜா ஆகியோர் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி முதற்கட்டமாக அண்ணா சாலையில் இருந்து தி.நகர் பகுதிக்குள் நுழையும் முக்கிய சிக்னலாக வாணி மாஹல் சிக்னல் தான் உள்ளது. இந்த சிக்னலை வழக்கமான நாட்களில் கடக்கும் போது குறைந்தது 7 முதல் 8 நிமிடங்கள் ஆகும். இதையடுத்து வாணி மஹால் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் வழியாக தி.நகர் நாயர் சாலைக்கு செல்லும் வாகனங்கள், வாணி மஹால் சிக்னல் அருகே உள்ள இடதுபுறம் திரும்பி, ஒரு அறை வட்ட பாதையை கடந்து மீண்டும் மற்றொரு இடதுபுறம் திரும்பி வழக்கமான பகுதிக்கு செல்லலாம்.அதேபோல், அண்ணா சாலையில் இருந்து ஜிஎன் செட்டி சாலை வழியாக தி.நகருக்கு செல்லும் வாகனங்கள் வாணி மஹால் சிக்னலில் நிற்காமல் நேராக சென்று ஒரு ‘யூ’ திருப்பத்தை அடைந்து செல்லும் இடத்தை எளிதில் செல்லாம்.

அதேபோல், தி.நகரில் இருந்து வரும் வாகனம் அதேபோல் ‘யூ’ திருப்பம் அடைந்து பின்னர் அவர்கள் செல்லும் இடங்களுக்கு செல்லலாம். இந்த சிறப்பு நடைமுறையால் வாணி மஹால் சிக்னல்களில் எந்த வாகனங்களும் நிற்காமல் அவரவர் செல்லும் இடங்களுக்கு தடையின்றி செல்லும் வகையில் போக்குவரத்து போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு தி.நகர் பகுதிக்கு வரும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளதால் சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிக்னல்களில் மாற்றம் செய்ய போக்குவரத்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post போக்குவரத்து போலீஸ் நடவடிக்கையால் தி.நகர் வாணி மஹால் சிக்னலில் நெரிசலின்றி செல்லும் வாகனங்கள்: போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : T. Nagar Vani Mahal ,Chennai ,T.Nagar ,D. Nagar Vani Mahal ,
× RELATED தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில்...