×

ஒன்றிய அரசை கண்டித்து 2 இடங்களில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பெரியார் தூண் அருகே ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. விவசாய சங்க மாவட்ட தலைவர் சாரங்கன் இதில் தலைமை தாங்கினார். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக அந்நிறுவனத்தின் மீது தேச துரோக வழக்கு தொடுத்து எப்ஐஆர் வழங்கப்பட்டது.

இதில், இந்நிறுவனத்தின் தலைமை நிருபர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பத்திரிகை ஜனநாயகம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தேச துரோக வழக்கு தொடுத்தது கண்டனத்திற்குரியது என்றும் கூறி அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எப்ஐஆர் நகலை தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது, 20க்கும் மேற்பட்ட போலீசார் எப்ஐஆர் நகல் எரிக்கப்படுவதை தடுத்தனர்.

அனைத்து பிரதிகளையும் விவசாயிகள் சங்க உறுப்பினர்களிடமிருந்து பறித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்து கலைந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, சிபிஐ மாவட்ட செயலாளர் மூர்த்தி, நந்தகோபால், டிஎன்டிஏ நிர்வாகிகள் முருகேசன், செல்வம், சீனிவாசன் ஆனந்தன், சுகுமார், பன்னீர்செல்வம், வேணுகோபால், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாய சங்கம்: இதேபோல், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விவசாய சங்க நிர்வாகி லாரன்ஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் விவசாயிகளுக்கு 3 மாத காலமாக வழங்காமல் இருக்கும் சம்பளத்தை வழங்க வேண்டும்.

சம்பளத்தோடு சேர்த்து சட்டப்படி இழப்பீட்டு தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவித்தபடி சட்டப்படி 15 நாட்களுக்குள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் விவசாயிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்து முழு ஒருநாள் கூலியான 293 ரூபாய் வழங்க வேண்டும். வருங்காலத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், ஒருநாளைக்கு 600 ரூபாய் சம்பளமும் வழங்கிட வேண்டும்.

பண்டிகை காலம் நெருங்குவதால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் பிவி சீனிவாசன், கைத்தறி சங்க நிர்வாகிகள் சங்கர், தங்கராஜ், கமலநாதன், வடிவுக்கரசி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து 2 இடங்களில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers Union ,Union Government ,Kanchipuram ,Kanchipuram District ,Periyar Dhun ,United Front Farmers Union ,
× RELATED அனைத்து பாசன, வடிகால் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்