×

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயிலில் சிலிண்டர்களை ஏற்றிய கும்பல்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை, தாம்பரம் போன்ற பல்வேறு இடங்களுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். அதேபோல் சாமி தரிசனத்துக்காகவும் திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர்களை கொண்டு வந்து ரயிலில் ஏற்றியிருக்கின்றனர். அப்போது, அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்துள்ளார்.

இதனை கண்ட அவர்கள் ரயிலில் சிலிண்டரை ஏற்றுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் அவற்றை இறக்கி அவரிடம் வீடியோ எடுக்கக்கூடாது என அறிவுறுத்தியிருக்கின்றனர். இதனையடுத்து, அந்த சிலிண்டர்களை மீண்டும் ரயிலில் ஏற்றி எடுத்துச் சென்றிருக்கின்றனர். ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் லக்னோவில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 60க்கும் மேற்பட்டோர் சமைக்க சிலிண்டரையும் ரயிலில் எடுத்து வந்தநிலையில், மதுரையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிட்டது. இந்தநிலையில் ரயில்களில் விதிமுறைகளை மீறி சிலிண்டர்களை எடுத்துச் செல்லும் சம்பவம் மீண்டும் அரங்கேறுகிறது.

இவர்கள் எப்படி ரயில் நிலையத்திற்கு சிலிண்டரை கொண்டு வந்தனர்? எப்படி சிலிண்டருடன் வந்தவர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்? இதனை ரயில்வே துறையினர் கவனிக்க தவறிவது ஏன்? அனுமதியுடன் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் அதனை ரயிலில் ஏற்றியபோது வீடியோ எடுக்கக்கூடாதென ஏன் கூறினர்? எனும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. சிலிண்டர்கள் ஏற்றப்பட்டதால் சம்பந்தப்பட்ட ரயிலில் பயணித்தவர்கள் அச்சத்துடன் செல்ல நேரிட்டது. இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது‌.

The post காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயிலில் சிலிண்டர்களை ஏற்றிய கும்பல்: வீடியோ வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Gang ,Kanchipuram New Railway Station ,Kanchipuram ,Chennai ,Tambaram ,Sami ,
× RELATED காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே தேங்கி...