×

தீபாவளி சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

புழல்: செங்குன்றம் அருகே, தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பொருட்கள் வழங்காததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த காந்தி நகரில் சத்தியமூர்த்தி என்பவர் தீபாவளி மற்றும் பொங்கல் முன்னிட்டு மாதசீட்டு நடத்தும் நிறுவனம் நடத்தி வந்தார். இதில் மாதந்தோறும் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் என அறிவித்து தங்க நாணயம் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பட்டாசு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சீட்டில் செங்குன்றம், காந்திநகர், நல்லூர், பாடியநல்லூர், அலமாதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணம் கட்டி வந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளியின் போது எந்த பொருட்களும் வழங்காமல் இருந்து வந்ததால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மக்கள் அந்த தனியார் நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சோழவரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி அனுப்பினார்கள். மீண்டும் சீட்டு பணம் நடத்தி சத்யமூர்த்தி பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் செங்குன்றம் அடுத்த காந்திநகர் சத்தியமூர்த்தி அலுவலகம் முன்பு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை சீட்டு கட்டிய வாடிக்கையாளர்கள் என வரிசையில் பரிசுகள் வழங்கப்படும் என ஒரு பத்திரிக்கையில் விளம்பரம் செய்திருந்தார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் நேற்று காந்திநகர் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. அந்த அலுவலகத்தை பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு அருகில் உள்ள காந்திநகர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி 50க்கும் மேற்பட்ட வரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் இதனால் இந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் கட்டிய எங்கள் பணத்தை வழங்க வேண்டும். எங்களை ஏமாற்றிய சத்தியமூர்த்தியை கைது செய்ய வேண்டும். பலமுறை சோழவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனைக் கண்டித்து தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்,’’ என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

The post தீபாவளி சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Puzhal ,Sengunram ,Gandhi… ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் ஏலம்