×

5ம் வகுப்பு மாணவன் மரண வழக்கு; சென்னை தலைமையிடத்து டிஐஜி ராதிகா விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம்: விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வயல்வெளி பகுதியில் கடந்த 1999ம் ஆண்டு பள்ளி மாணவர் ஒருவர் இறந்து  கிடந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார், அந்த மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த பாவாடை மகன் சுரேஷ் (10) என்பதும், சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, மாணவன் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.இதனிடையே இந்த வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக அப்போதைய சி.பி.சி.ஐ.டி. எஸ்பி ராதிகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவன் சுரேஷ் பயின்ற பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததும், அதனை மறைப்பதற்காக பள்ளி நிர்வாகத்தினர், மாணவன் சுரேஷின் உடலை எடுத்துச்சென்று ஆத்தூரில் உள்ள வயல்வெளி பகுதியில் வீசிவிட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் பிரகாஷ், ஊழியர்களான சின்னப்பன், மணிபாலன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான ராதிகா நேற்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். சாட்சியம் அளித்த ராதிகா, தற்போது சென்னையில் தமிழக காவல்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post 5ம் வகுப்பு மாணவன் மரண வழக்கு; சென்னை தலைமையிடத்து டிஐஜி ராதிகா விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம்: விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : DIG Rathika Viluppuram court ,Chennai ,Viluppuram ,Aathur ,Salem district ,
× RELATED மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...