×

தெற்கு பகுதிக்கு மக்கள் செல்ல 4 மணி நேரம் கெடு காசா நகரை சுற்றி வளைத்தது இஸ்ரேல்: பலி 10 ஆயிரத்தை தாண்டியது

ரபா: காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் படையினர், அடுத்த 48 மணி நேரத்தில் உள்ளே புகுந்து தாக்கப் போவதாகவும், எஞ்சியிருக்கும் மக்கள் 4 மணி நேரத்தில் தெற்கு பகுதிக்கு இடம் பெயரவும் எச்சரித்தது. பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினருக்கு எதிரான போர், நேற்றுடன் 30 நாட்களை எட்டி நீடிக்கிறது. இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையால் வடக்கு காசாவில் இருந்த 8 லட்சம் பேர் தெற்கு காசா பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து காசாவிற்குள் இஸ்ரேல் படை புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு ஹமாசுடன் போரிட்டு தொடர்ந்து முன்னேறி வரும் இஸ்ரேல் படை தற்போது முக்கிய நகரமான காசா நகரை முற்றுகையிட்டுள்ளது.

காசா நகரை சுற்றிவளைத்துள்ள இஸ்ரேல் படைகள், உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த தயாராகி உள்ளன. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி நேற்று முன்தினம் இரவு அளித்த பேட்டியில், ‘‘இப்போது காசா முனை வடக்கு, தெற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவில் ஹமாஸ் பதுங்கு குழிகள், ரகசிய நிலத்தடி சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக காசா நகரில் அடுத்த 48 மணி நேரத்தில் உள்ளே புகுந்து தரை வழி தாக்குதல் நடத்த உள்ளோம். எனவே, அங்கு எஞ்சியிருக்கும் மக்கள் தெற்கு நோக்கி செல்ல 4 மணி நேர அவகாசம் வழங்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் இந்த அவகாசம் தொடங்கும்’’ என்றார்.

குறிப்பிட்ட 2 சாலை வழியாக காசா நகர மக்கள் தெற்கு நோக்கி செல்லலாம் என்றும், அதுவரை தாக்குதலை நிறுத்தி வைப்பதாகவும் இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது. தற்போது வடக்கு காசாவில் இன்னும் 3 லட்சம் பேர் தங்கி உள்ளனர். ஏற்கனவே கடுமையான குண்டுவீச்சில சாலைகள், பாலங்கள் முற்றிலும் அழிந்து போக்குவரத்து வசதி இல்லாமல், எரிபொருள் இல்லாமல் அங்குள்ள மக்கள் தெற்கு நோக்கி செல்வது இயலாத காரியமாக உள்ளது. இந்த நிலையில், காசா நகரில் இஸ்ரேல் படை நுழைந்து தாக்கினால் பொதுமக்கள் பலரும் குண்டுகளுக்கு இரையாகக் கூடும்.

திங்கள் அல்லது செவ்வாய் கிழமையில் எந்த நேரத்திலும் இஸ்ரேல் படை காசா நகரில் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய இப்போரில் இதுவரை காசாவில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நேற்று தாண்டியது. மொத்தம் 10,022 பேர் பலியாகி இருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் புதிய நாடாக உருவாக்கப்பட்ட 75 ஆண்டில் நடந்த போர்களில் குறுகிய நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறை.

The post தெற்கு பகுதிக்கு மக்கள் செல்ல 4 மணி நேரம் கெடு காசா நகரை சுற்றி வளைத்தது இஸ்ரேல்: பலி 10 ஆயிரத்தை தாண்டியது appeared first on Dinakaran.

Tags : Israel ,Gaza City ,Raba ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்