×

ங போல் வளை-யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

அறிவும் இனிமையும் அனலின் வடிவமே!

அலுவலகத்தில் மிகத்தீவிரமாக வேலை செய்யக்கூடிய ஒருவரை, ‘அவரு தீயா வேலை செய்வாரு’ எனக் குறிப்பிடுவதுண்டு. அதே போல புதிதாகச் சேர்ந்த ஒருவரையும் ‘தீயா வேலை செய்யணும்’ என மெல்லிய கிண்டலுடன் குறிப்பிடுவதுண்டு. நமது அன்றாடத்தில் இருக்கும் பேச்சு வழக்கில், நம்மை அறியாமலே பழமொழிகளையும் முன்னோர் சொன்னவற்றையும் இணைத்துக்கொள்கிறோம். அவை பெரும்பாலும் எளிமையாகச் சொல்லப்பட்ட ஆழமான அர்த்தம் கொண்ட சொற்களாகவே இருக்கும். ஆத்திச்சூடி ஒரு நல்ல உதாரணம்.

அப்படித்தான், ‘தீயா வேல செய்யணும் குமாரு ‘ போன்ற சினிமா வசனங்களும். எனினும் ஒரு பகடியாக அவற்றைப் புரிந்துகொள்வதைவிட, சிலவற்றை அதன் மூலத்தில் இருந்து தெரிந்துகொள்வது நன்மை பயக்கும்.உதாரணமாக, நோய் உருவாக்குவதிலும், குணமாக்குவதிலும், அனலுக்கு மிக முக்கியமான பங்குண்டு. ஒருவருடைய அக்னித்தன்மைதான் உணவைச் செரிப்பதற்கும், அதிலிருந்து ஆற்றலை உறிஞ்சுவதற்கும், கழிவுகளை எரிப்பதற்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் முதன்மையான காரணி என்பதால் இதில் நிகழும் சமநிலை மற்றும் சமநிலையின்மையை ‘ஆயுர்வேதம்’ பித்த தோஷம் என்கிறது.

ஆயுர்வேதத்தின் முதன்மை நூலான சரக சம்ஹிதையில் சரகர் ‘அனைத்து நாட்பட்ட நோய்களும் வயிற்றில் தொடங்குகிறது’ எனக் குறிப்பிடுகிறார். யோக மரபோ, ‘அனைத்து நோய்களுக்கும் அடிப்படை ஜடராக்னி, உதராக்னிதான். இந்த இரண்டு வகை அக்னிகளும் அவை உறையக்கூடிய இடம் வயிற்றுப்பகுதிதான்
என்கிறது.

வேத மரபோ ‘அசைவினால் எழுபவன், ஒன்றின் சாரத்தை உறிஞ்சுபவன், ஜடராக்னி என்றும், ‘பருப்பொருட்களை நுண் வடிவமாக மாற்றக்கூடியவன், பத்தொன்பது வாய்கள் கொண்டவன், எதையும் செரிக்கவல்லவன்’ வைஷ்வாநரன்’ என்றும், ஒருவருடைய புத்திக்கூர்மை, புரிந்துகொள்ளும் திறன், தைரியம், லட்சியம் போன்ற விஷயங்கள் ‘மேதாக்னி ‘ எனும் அனலால் உருவாகிறது எனவும் சொல்கிறது. இது, ஆயுர்வேத நூல்களிலும் காணக்கிடைக்கிறது.

அதே வேளையில் இவற்றை வெறும் உருவகங்களாக, மாயத்தன்மை ஏற்றப்பட்ட கருத்துக்களாக நம்பிக்கை சார்ந்த விதிகளாக முன் வைக்காமல், ஒவ்வொரு அக்னியின் தன்மை, நம் உடலில் உறையும் இடம், அதன் சாதக பாதக அம்சங்கள், அவற்றைச் சரியாக நிர்வகிக்கத் தேவையான மாற்று மருத்துவ முறைமைகள், பயிற்சிகள் என முழுமையான பார்வையும் மரபில் தொடங்கி இன்றுவரை வந்து சேர்ந்திருக்கிறது.

ஆயுர்வேதத்தின் அடிப்படை அலகுகளான, வாதம், பித்தம், கபம் எனும் முக்குணங்களில், பித்தம் எனப்படுவது அக்னி மற்றும் அக்னியின் தன்மை என்றே வரையறை செய்யப்படுகிறது. இந்தப் பித்தத்தன்மையில் தோஷம் உள்ளவர்கள், அவர்கள் கடைபிடிக்க, மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள், உணவுகள், அவர்களுடைய பண்பு மற்றும் குணங்கள் எனப் பலவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

பித்த பிரக்ருதிகள் தைரியசாலிகளாகவும், அறிஞர்களாகவும், தேஜஸ்விகளாகவும் இருப்பர். இவர்களுக்குப் பசியும் தாகமும், தீவிரமாக இருக்கும். உடல் சற்று வெப்பமாகவே இருக்கும். குளிர்ச்சியான பிரதேசங்களை இவர்கள் அதிகம் விரும்புவர். இவர்கள் உடலும் மனமும், சுறுசுறுப்பாகவே இருக்கும். அடிக்கடி கோபப்படுவார்கள். பித்தம் ரஜோ குணமுடையது என்பதால் ஒரு அதிகாரத்தன்மை இருக்கும். இவர்கள் உண்ணத்தகுந்த உணவு, இனிப்பு, துவர்ப்பு. மேலும் தேங்காய் எண்ணெய் இவர்களுக்கு நல்லது. கோழி மாமிசம், காரம், புளிப்பு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சரகர் தனது நூலில், பயம், கவலை, உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம் போன்ற மன நிலைகளில் இருக்கும்போது ஒருவர் உணவு உண்ணக்கூடாது. அது முதலில் அக்னித்தன்மையைத்தான் பாதிக்கும். ஒன்று, அக்னியை நீர்த்துபோகச்செய்யும் அல்லது அதீதமாகத் தூண்டிவிடும். இந்த இரண்டு நிலைகளுமே ஆரோக்கியத்துக்கு எதிரானவை என்கிறார்.ஆயுர்வேதம் என்பதை இந்திய மரபு துணை வேதம் என்கிறது. நான்கு முதன்மை வேதங்களில் அதர்வ வேதத்தின் கிளையாக ஆயுர்வேதம் சொல்லப்படுகிறது. ஆகவே, யோக மரபும் ஆயுர்வேதம் சொல்லும் அக்னியையே தன்னுடைய கருதுகோள்களுக்கும், பாடத்திட்டத்துக்கும் அடிப்படைகளாக எடுத்துக்கொள்கிறது.

அந்த வகையில், பித்தபிரகிருதிகளுக்கு பயிற்சிகளை வடிவமைக்கையில், ஏற்கெனவே அக்னிதன்மையால் தூண்டப்பட்டு பித்த தோஷம் மிகுந்தவர்கள், உடல் உஷ்ணமான தன்மையுடனும் சற்று எரிச்சலடையக்கூடிய மனநிலையிலும் இருப்பதால், இவர்கள் அதி வேகமான பயிற்சிகளை செய்யக்கூடாது எனப்படுகிறது. அது போலவே அதிக எண்ணிக்கையிலான பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது. அது உடற்பயிற்சிக்கூடத்தில் செய்யப்படும் பயிற்சிகளாக இருந்தாலும் சரி, யோகப் பயிற்சிகளாக இருந்தாலும் சரி, மிகச்சரியான அளவில் மட்டுமே பயில வேண்டும்.

அதிலும் யோக ஆசனங்கள் ஐந்து முதல் பத்து ஆசனங்களைத் தங்களுடைய உடல்வாகுக்குத் தக்கவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றை மிகவும் மெதுவாகவும், ஆழ்ந்த சுவாசம் மற்றும் இலகுவான அசைவுகளுடனும் செய்ய வேண்டும், வயிற்றுப்பகுதியை மையமாகக்கொண்டு பயிற்சிகள் ஒவ்வொரு நாளும் செய்தாக வேண்டும். ஒவ்வொரு பயிற்சியின் இடையிலும் ஓய்வும், நீண்ட சுவாசமும் அவசியம்.

இவற்றைத் தவிர நடைப் பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொள்ளலாம். அதிலும், சற்றும் மெதுவான இலகுவான அசைவுகளை மேற்கொள்ள வேண்டும்.ஆசனப் பயிற்சியின் போது நன்கு சுவாசத்தை உள்ளிழுத்து வெளியிடுதலும், முடிந்தவரை கண்கள் மூடி ஒவ்வொரு ஆசனத்தையும் உணர்ந்து, செய்தலும் மிகவும் முக்கியமானது. இருபது நிமிடங்கள் வரை உடல் சார்ந்த பயிற்சிகளை முடித்துவிட்டு, பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சிகளும், பிரத்யாகாரம் எனப்படும் புலன்களைச் சரியாக நிர்வகிக்கும் பயிற்சிகளும் மட்டுமே அக்னித்தன்மை கொண்ட மனிதர்களுக்கு உகந்தது.

அன்றாட வாழ்க்கையின் அம்சங்களான, உற்சாகம், செயல்திறன், சோர்வின்மை, அமைதியான மனநிலை போன்றவற்றை வழங்குவதில் நமது சுரப்பிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பது பல்வேறு முறைகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை வழங்குவதில் முக்கியமான பங்கு என நம் யோக மரபு மூன்று காரணிகளை கூறுகிறது.ஓஜஸ், தேஜஸ், பிராணன் என்ற இவை மூன்றும் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும் முழுமையையும் வழங்குகிறது. எனினும், இவை நம்மில் சுரந்து கொண்டே இருந்தாலும் அன்றாட வாழ்வியல் சிக்கல்களால், விரயம் செய்யப்படுவதைத் தவிர்க்கவும் முடிவதில்லை.

நமது அக்னி தத்துவமே இந்த மூன்றையும் நிர்வகிக்கிறது என்பதால், நமது பயிற்சிகள் அக்னியை உன்னதமாக வைத்துக்கொள்ளக்கூடியதாக இருத்தல் அவசியம். அவ்வகையில் பிராணாயாமமும், பிரத்யாகாரமும் இணைந்து உடல் ஆழ்மனம் எனும் இரு நிலைகளில், ஆற்றலை உற்பத்தி செய்யவும், சேகரித்து வைக்கவும், வாழ்வின் மிக முக்கியமான நேரங்களில் உதவி செய்யவும் வழிவகுக்கிறது.

உதாரணமாக, பிரத்யாகாரப் பயிற்சியை முறைப்படிக் கற்றுக்கொண்ட ஒருவர் முதலில், தன்னை பற்றிய விழிப்புணர்வை அடைகிறார். எந்த முயற்சியும் இல்லாமல் இயல்பாக அவருடைய அவதானிப்பு எனும் நிலை நாள்முழுவதும் நீடிக்கிறது. அப்படி நீளும் அவதானிப்பில் மிகக்குறைந்த நாட்களில் தன்னுடையப் போதாமைகள், கவலைகள், அச்சங்கள், காமம், கோபம் போன்ற உணர்வுகளின் வீரியத்தைக் கண்டுகொள்கிறார்.

இந்தக் காலகட்டத்தில்தான், இவ்வகை உணர்ச்சிகளைக் கையாள மேலே சொன்ன அக்னி, ஓஜஸ் தேஜஸ், பிராணன் போன்ற உள்ளே சேகரித்த ஆற்றல்கள் மேலெழுந்து வந்து அவருக்கு உதவி செய்கின்றன. அவர் வெறும் ஆறு மாதங்களில் இவற்றிலிருந்து வெளிவந்து விடமுடியும்.ஏனெனில் வைஸ்வாநரன் எனும் அக்னியோ எதையும் செரிக்கவல்லவன். மரண பயம் உட்பட.

மேரு வக்ராசனம்

இந்தப் பகுதியில் மேரு வக்ராசனம் எனும் பயிற்சியைப் பார்க்கலாம். முதுகுப் பகுதியில் இறுக்கமும், அடிமுதுகுத்தண்டில் வலியும் இருப்பவர்கள் கற்று பயன் பெறலாம். கால்கள் நீட்டிய நிலையில் அமர்ந்து இடது காலை மடித்து வலது தொடையின் அருகில் வைத்து, இடுப்பையும் தலையையும் முழுவதுமாக வலது பின் புறம் திருப்பி இரு கைகளையும் தரையில் வைத்து மூன்று முறை மூச்சு விட்டுக்கொள்ளலாம். இதே போல வலது புறமும் செய்தால் ஒரு சுற்று முடிகிறது. ஒருவர் ஐந்து சுற்றுகள் வரை செய்யலாம்.

The post ங போல் வளை-யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Vela Yoga ,Kumkum ,Dr. ,Yoga ,Selandararajan.ji ,
× RELATED மனவெளிப் பயணம்