×

போதைக்காக பாம்பு விஷம் பயன்படுத்திய விவகாரம்; மேனகா காந்தி மீது அவதூறு வழக்கு போடுவேன்!: இமேஜை கெடுப்பதாக பிரபல யூடியூபர் ஆவேசம்

நொய்டா: போதைக்காக பார்ட்டியில் பாம்பு விஷம் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கிய யூடியூபர், பாஜக எம்பி மேனகா காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக ஆவேசமாக கூறினார். உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் நடந்த பார்ட்டி ஒன்றில் பாம்புகளையும், அவற்றின் விஷத்தையும் போதைக்காகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். புகாருடன் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட வீடியோவில் இருந்த எல்விஷ் யாதவ் என்ற யூடியூப் மற்றும் ‘ஓடிடி’ பிரபலத்தை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், நொய்டாவில் பார்ட்டி நடந்த இடத்திலிருந்து சில பாம்புகளையும், பாம்பு விஷத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 9 பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 5 ராஜநாக வகையைச் சேர்ந்தவையாகும்.

கைதான 6 பேரிடமும் போலீசார் விசாரணை செய்தபோது, எல்விஷ் யாதவ் நடத்தும் பார்ட்டிகளுக்கு வழக்கமாகவே இதுபோன்று பாம்புகளையும், பாம்பு விஷங்களையும் விநியோகிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து எல்விஷ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ‘பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்’ என்ற பிராணிகள் நலன் பாதுகாப்பு சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் (பாஜக எம்பி மேனகா காந்தியுடையது) எல்விஷ் யாதவ் மீது புகார் கொடுத்தது. இந்நிலையில் எல்விஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘இந்த வழக்கில் எனது பங்கு 0.1 சதவீதம் இருந்தால்கூட என் மீது நடவடிக்கை எடுங்கள். ஆதாரம் இல்லாத குற்றசாட்டின் அடிப்படையில் எனது பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேனகா காந்தி அளித்த பேட்டியில், ‘வனவிலங்குக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். வீடியோவில் சொல்வது போல் எல்விஷ் யாதவ் தவறு செய்யவில்லை என்றால், எதற்காக ஓடி ஒளிய வேண்டும். பாம்புகளுக்கு அதன் விஷம்தான் ஜீரணத்துக்கு உதவுகின்றன. விஷமின்றி அவற்றால் எந்த உணவையும் ஜீரணிக்க முடியாது. எல்விஷ் யாதவை நீண்ட காலமாக கண்காணித்தே இந்தப் புகாரைக் கொடுத்துள்ளோம். அவர்கள் பாம்பு விஷத்தை விற்பதை உறுதி செய்துள்ளோம். பாம்பு விஷமானது சிறுநீரகத்தையும், கல்லீரலையும் செயலிழக்கச் செய்யும். இது மிகவும் ஆபத்தானது’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எல்விஷ் யாதவ், ‘மேனகா காந்தி என் மீது குற்றம் சாட்டியுள்ளார். நான் பாம்புகளை சப்ளை செய்பவன் என்று கூறினார். அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன். நான் அவரை சும்மா விடமாட்டேன். இவ்விசயத்தில் என் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்தேன். எனக்கு எதிராக அவதூறுகளை பரப்புவதால், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடருவேன். இவர்களால் என் இமேஜ் கெட்டுப் போகிறது’ என்றார். இவ்விவகாரம் குறித்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், ‘எல்விஷ் யாதவ் வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். இதைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. எல்விஷ் யாதவ் தவறு செய்திருந்தால், அவர் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்’ என்றார்.

The post போதைக்காக பாம்பு விஷம் பயன்படுத்திய விவகாரம்; மேனகா காந்தி மீது அவதூறு வழக்கு போடுவேன்!: இமேஜை கெடுப்பதாக பிரபல யூடியூபர் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Maneka Gandhi ,Noida ,BJP ,
× RELATED ராமர் கோயில் கட்டியது தேர்தல் பிரச்னை அல்ல: மேனகா காந்தி பேட்டி