×

கண்ணன் அவர்களது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்: கே.எஸ்.அழகிரி இரங்கல்!

சென்னை: கண்ணன் அவர்களது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள X தள பதிவில்; புதுச்சேரி மாநில அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்குமிக்க தலைவராக விளங்கி, ஆட்சிப் பொறுப்பில் பல்வேறு பதவிகளை வகித்த திரு. ப. கண்ணன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்று புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று மிகச் சிறப்பாக துடிப்புடன் செயல்பட்டவர்.

இவரது சிம்ம கர்ஜனையை கேட்டு காங்கிரஸ் கட்சியில் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஏராளம். அக்காலங்களில் கண்ணன் – பாலாஜி என்ற இரட்டையர்கள் இளைஞர்களிடைய மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியவர்கள். புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக, சபாநாயகராக, உள்துறை அமைச்சராக என முக்கிய பொறுப்புகளை வகித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். மக்கள் தலைவர் மூப்பனார் தலைமையை ஏற்று புதுச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டாலும் பிறகு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

எப்பொழுதும் உணர்ச்சிப்பூர்வமாக சிந்தித்து செயல்படக் கூடிய ப. கண்ணன் அவர்கள் அடிக்கடி சில முடிவுகளை எடுத்து கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்டாலும் இறுதியாக காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக அன்னை சோனியா காந்தி அவர்களால் நியமிக்கப்பட்டவர். தமது இறுதி காலத்தில் குபேர் சந்தை பிரச்சினையில் வணிகப் பெருமக்களுக்காக காங்கிரஸ் தலைமையிலான, தி.மு.க. உள்ளிட்ட மதச்சார்பற்ற இந்தியா கூட்டணியோடு இணைந்து குரல் கொடுத்தவர்.

இதன்மூலம் இறுதி காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்டவர். அரசியல் பேராண்மைமிக்க தலைவரான ப. கண்ணன் அவர்களது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அரசியல் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எங்களிடையே நட்பு என்றைக்கும் நிலைத்திருந்தது. தனிப்பட்ட முறையில் 40 ஆண்டுகால நண்பரை நான் இழந்த துயரத்தில் இருக்கிறேன். இவரது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post கண்ணன் அவர்களது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்: கே.எஸ்.அழகிரி இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Kannan ,Congress ,KS Azhagiri ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Dinakaran ,
× RELATED அரசமரம் ஒன்று ஆனைமுகன் இருபத்திரண்டு!