×

மரக்காணம் பகுதியில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோய்

*கால்நடை வளர்ப்போர் கவலை

மரக்காணம் : மரக்காணம் பகுதியில் கந்தாடு, எம்.புதுப்பாக்கம், திருக்கனூர், நடுக்குப்பம், பச்சை பைத்தான்கொள்ளை, வண்டிப்பாளையம், ஆலத்தூர், அசப்பூர், ராயநல்லூர் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆடு, பசுமாடு போன்ற கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து அதன் மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் கால்நடைகளை மர்ம நோய்கள் தாக்குவதால் பல கால்நடைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி உள்ளது. இதுபோல் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பதன் காரணமாக கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பெருமளவில் நஷ்டம் அடைகின்றனர். இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவ துவங்கி உள்ளது. இந்த அம்மை நோய் மிக விரைவாக அடுத்தடுத்த கால்நடைகளுக்கும் பரவி வருவதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் அவதிப்படுகின்றனர். இந்த அம்மை நோயால் பாதிக்கப்படும் கால்நடைகள் உணவு கூட உண்பதில்லை என்பதால் அதனை வளர்ப்பவர்கள் நீடில்கள் போன்ற குழாய் பைப்புகள் மூலம் உணவை கொடுக்கின்றனர்.

இந்த நோய் பாதிக்கப்பட்ட ஒரு சில கால்நடைகளும் உயிரிழந்து உள்ளதாக கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து கால்நடைத்துறை மருத்துவர்கள் கூறும்போது, தற்போது எல்லா மாவட்டங்களிலும் அம்மை நோய் கால்நடைகளை தாக்கி வருகிறது. இந்த அம்மை நோய் தாக்கும் கால்நடைகளுக்கு ஊசியும் போட முடியாது. இதனால் சத்தான உணவு கொடுத்தால் மட்டுமே குணமடையும் நிலை உள்ளது.

தற்போதுதான் டானிக் வகையில் ஒரு மருந்து வந்துள்ளது. இந்த மருந்தை தான் கால்நடைகளுக்கு கொடுத்து வருகிறோம். எனவே, அம்மை நோய் தாக்கும் கால்நடைகளை உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி ஆங்கில வழி மருத்துவமோ அல்லது பாரம்பரிய முறையில் கடைபிடித்து வரும் சித்த மருத்துவத்தையோ பயன்படுத்த வேண்டுமென கூறுகின்றனர்.

The post மரக்காணம் பகுதியில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோய் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Kandadu ,M. Puthupakkam ,Thirukanur ,Nadukkuppam ,Pachi Paithankollai ,Vandipalayam ,Alatur ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...