×

சென்னையில் அமலானது வேக கட்டுப்பாடு மாநகரம் முழுவதும் 177 இடங்களில் ஏஎன்பிஆர் கேமரா ‘செக்’ பண்ணும்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் பேட்டி

சென்னை: சென்னையில் வேக கட்டுப்பாடு அமலுக்கு வந்த நிலையில், மாநகரம் முழுவதும் 177 சந்திப்புகளில் ‘ஏஎன்பிஆர்’ எனப்படும் ஆட்டோமேடிக் நம்பர் பிளேட் பதிவு கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரே நாளில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தெரிவித்துள்ளார். சென்னையில் வேகக் கட்டுப்பாட்டு அளவு கண்டுபிடிக்கும் நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது, இதையடுத்து வேக கட்டுப்பாடு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:

வேக கட்டுப்பாடு தொடர்பாக கூடுதல் கமிஷனராக இருந்த கபில் குமார் சரத்கார் தலைமையில் கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர், ஒரு ஆர்டிஓ, நெடுஞ்சாலைத்துறையில் உள்ள துணை இயக்குநர், ஐஐடி பேராசிரியர், என்ஜிஓவினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக் குழுவின் ஆய்வறிக்கை தமிழ்நாடு போக்குவரத்து இயக்குநருக்கு அளிக்கப்பட்டது. அந்த பரிந்துரை ஏற்கப்பட்டு நவம்பர் 4ம் தேதி முதல் புதிய வேக கட்டுப்பாட்டு அளவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இலகு ரக வாகனங்களின் வேக அளவு 60 கி.மீட்டரும், கன ரக வாகனங்களுக்கு 50 கி.மீட்டரும், இருசக்கர வாகனங்களுக்கு 50 கி.மீட்டரும், ஆட்டோவுக்கு 40 கி.மீட்டரும் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 30 கி.மீட்டராகவும் வேக அளவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வேக கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்த பிறகு வாகனங்களில் அதிவேகமாக சென்றவர்கள் மீது நேற்று ஒரே நாளில் 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகளவில் இருசக்கர வாகனம் தான் வேக கட்டுப்பாட்டை மீறியுள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் ஐந்து மட்டுமே வழக்கில் சிக்கின. மற்ற எல்லா வழக்குகளும் இரு சக்கர வாகனங்கள் மீது தான். அண்ணாசாலையில் ஒரு சில இடங்களில் ‘யூ’ டர்ன் தடுப்புகள் அமைத்து ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளோம். இது குறித்து டிவிட்டரில் கருத்துக்கள் கேட்டோம். 70 சதவீதம் பேர் தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர்.

இந்த நடைமுறை நன்றாக இருக்கிறது என்று 32 சதவீதம் பேரும், எங்களுக்கு இது பிடிக்கவில்லை என்று 30 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர். நாங்கள் கூகுள் மேப் வைத்து அண்ணாசாலை, ஈவெரா சாலை, ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலைகளில் எல்லாம் ஆய்வு செய்தோம். முதல்கட்டமாக அண்ணாசாலையை நாங்கள் ஆய்வு செய்தோம். எந்த சிக்னல்களில் போக்குவரத்து மெதுவாக செல்கிறது என்று பார்த்தபோது, நந்தனம், எஸ்ஐடி, தேனாம்பேட்டை ஆகிய சிக்னல்களை கடந்து செல்வதற்கு 15 நிமிடங்கள் ஆகிறது. அது குறித்து ஆய்வு செய்த போது, தான் சிக்னல்களின் நேரம் கணக்கிட்டு ஸ்பென்சர் சிக்னல்களில் சில மாற்றங்கள் செய்த போது, அது நன்றாக இருந்தது.

அதன் பிறகு நாங்கள் நந்தனம் சிக்னலில் நடைமுறைப்படுத்தினோம். பிறகு தேனாம்பேட்டையில் நடைமுறைப்படுத்தி உள்ளோம். எழும்பூரில் இருந்து விமான நிலையம் செல்ல ஒன்றரை மணி நேரம் ஆன நிலையில் தற்போது இந்த நடைமுறையால் 40 நிமிடங்களில் செல்வதாக டிவிட்டரில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து தானே வழக்கு பதிவு செய்யும் ஏஎன்பிஆர் கேமரா அண்ணாநகரில் உள்ளது. தற்போது அண்ணா மேம்பால சிக்னல், ஈகா சிக்னல் மற்றும் வட சென்னையில் மின்ட் பகுதியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் பணிகள் முடிந்த உடன் நடைமுறைப்படுத்தப்படும்.

இதுதவிர ‘ஐடிஎம்எஸ்’ திட்டம் மூலம் சென்னை முழுவதும் மொத்தம் 177 சந்திப்புகளில் ஏஎன்பிஆர் கேமராக்களை அமைக்கின்றனர். அடுத்த வாரம் முதல் மாநகரம் முழுவதும் பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களை தடுக்க போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அப்படி பயணம் செய்தால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மெட்ரோ பணிகள் பல இடங்களில் நடந்து வருதால் சாலையில் பேருந்துக்கு தனியாக பாதை அமைக்க முடியவில்லை. விரைவில் பேருந்து, கார்கள் செல்ல தனி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்பு வரை அபராதம் 20 சதவீதம் வரை வசூலானது. தற்போது கால் சென்டர்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கை மூலம் இன்றைய தேதி வரை 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. சாலை விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வார்கள் மட்டுமே வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. இவ்வாறு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தெரிவித்தார்.

* அடுத்த வாரம் முதல் மாநகரம் முழுவதும் பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களை தடுக்க போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

The post சென்னையில் அமலானது வேக கட்டுப்பாடு மாநகரம் முழுவதும் 177 இடங்களில் ஏஎன்பிஆர் கேமரா ‘செக்’ பண்ணும்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : ANBR ,Chennai ,Commissioner ,Sudhakar ,Additional Commissioner ,Transport ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...