×

டெல்டாவில் மீண்டும் மழை: புதுகையில் குளம் உடைந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

திருச்சி: வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தமிழகத்தில் மீண்டும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாலை 3 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்தது. மேட்டுப்பட்டி அருகே திருக்கட்டளையில் குளத்தின் கரை உடைந்ததால், இந்திராநகர், கேப்பரை, மேட்டுப்பட்டி பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கேப்பரையில் 150 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 2வது நாளாக இன்றும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதேபோல, புதுக்கோட்டை நகரில் காமராஜபுரம், எஸ்எஸ் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ள நீர் குளம்போல் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகராட்சிப் பணியாளர்கள் ஆங்காங்கே வடிகாலில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைத்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை , திருக்கட்டளை, மேட்டுப்பட்டி அருகே இந்திராநகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு வெள்ளநீர் வடிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. ஒன்றரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் 4 ரோடு பஸ் நிறுத்தம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் குளம்போல் காட்சியளித்தது.திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மதியம் ஒரு மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதேபோல் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களில் நேற்றிரவு மழை கொட்டியது. இன்று காலை நாகை, வேளாங்கண்ணியில் மிதமான மழை  பொழிந்தது. பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது….

The post டெல்டாவில் மீண்டும் மழை: புதுகையில் குளம் உடைந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Trichy ,North Andaman ,Tamil Nadu ,Pudukhai ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை