×

தமிழகத்தில் திமுக ஆட்சி என்பதால் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

அம்பத்தூர்: தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது என்பதால் அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப் பட்டுள்ளது என அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்பி கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், ”பேராற்றல் கொண்டவர் பேரன்பால் வென்றவர்” எனும் தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. தலைமை செயற்குழு தலைவரும் அம்பத்தூர் மண்டலக்குழு தலைவருமான பி.கே.மூர்த்தி தலைமை வகித்தார். டி.ஆர்,பாலு எம்பி, அமைச்சர் பி.ேக.சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் எம்எல்ஏ
இ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினர். இதில், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்பி பேசுகையில், ”கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் மிக மோசமான நிலையில் தமிழகம் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறதா? என்றால் இல்லை… தமிழக எம்பிக்களை பின்னுக்கு தள்ளுவதும் சபாநாயகர் எங்களை அமைதிப்படுத்துவதும்தான் தொடர்ந்து நடக்கிறது. நயவஞ்சகமாக நமது திட்டங்கள் கிடப்பில் போடுகிறது.

திமுக ஆட்சியில் 2300 கோடியில் பறக்கும் ரயில் திட்டம் திட்டமிடப்பட்டது. அது செயல்படுத்தப்படாமல் தற்போது 5800 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரை எய்ம்ஸ் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. பல வருடங்களாக பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமமல் உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது என்ற ஒற்றை காரணத்தினால் எல்லா திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்” என்றார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ”பத்தாண்டு காலம் உழைத்த தொண்டர்கள் எல்லாம் மனநிறையோடு ஆட்சி நடைபெறுகிறது என நினைக்கிறார்கள். ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படுகிறார். திமுகவிற்கோ தலைவருக்கோ ஏதாவது ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் சக்தி கட்சியினருக்கு இல்லை, கொதித்து எழுந்து விடுவார்கள். திமுகவை அழிக்கவேண்டும் என மோடி திட்டமிட்டு செயல்படுகிறார். எங்களை பார்த்து சொல்கிறார்கள், ஆன்மீகத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று, மாதத்திற்கு 3 வாரம் காவி வேட்டியை கட்டிக்கொண்டு சேகர்பாபு பணிகளில் ஈடுபடுகிறார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு பிறகுதான் மம்தா மனம் மாறினார், சிவசேனா மனம் மாறியது, எல்லா தலைவர்களும் தயாராகி விட்டார்கள் அதற்கு காரணம் முதல்வர் வகுத்த வியூகம்தான். வரும் தேர்தலில் தோற்கப்போகிறோம் என்ற பயத்தில் எதிர்க்கட்சிக்காரர்களின் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். எமர்ஜென்சி காலகட்டத்தில் கலைஞர் உடன் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். பல்வேறு துறைகளை மோடி தவறாக பயன்படுத்துகிறார். முதல்வர் எதற்கும் தயாராகிவிட்டார். அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை கலைத்துவிட முடியாது\\” என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “அமைச்சர் சேகர் பாபு இயந்திரம் போல் செயல்பட்டு தேனீயை போல் சுற்றி வருகிறார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பக்கூடிய இளைஞனாக இருந்தவர் கலைஞர். பெண்களுக்கு சொத்துரிமை சட்டமாக ஆக்கியவர் கலைஞர். முதன் முதலில் பெண்களுக்கு மகளிர் காவல் நிலையம் துவக்கியவர் கலைஞர். கலைஞரைபோல் முதல்வர் ஸ்டாலினும் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில் முனைப்போடு இருக்கிறார்\\” என்றார்.

நாஞ்சில் சம்பத் பேசுகையில், ”இன்று முக்கியமான காலகட்டம் என்று சொல்வதற்கு காரணம், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை மீட்கும் போரில் கலைஞர் வெற்றிபெற்றார். 1975ல் கலைஞர் எடுத்த முடிவை 2022ல் தமிழக முதல்வர் கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டை ஏன் வஞ்சிக்கிறீர்கள். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என ஊதி பெரிதாக்குகிறார்கள். குடியுரிமையை ஆதரித்தது எடப்பாடி கும்பல். மிசோரம் மாநில முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்கிறார், மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டால் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று. வருகிற ஐந்து மாநில தேர்தலில் பிஜேபிக்கு பாடை தயாராகிவிட்டது. ஒன்பது ஆண்டுகளில் 140 நாடுகளுக்கு 540 கோடி ரூபாய் சுற்றுப்பயணம் செலவு செய்ததை தவிர இந்தியாவிற்கு வேறு எதுவும் செய்ததில்லை\\” என்றார்.

The post தமிழகத்தில் திமுக ஆட்சி என்பதால் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Tamil Nadu ,Balu MB ,Ambattur ,D. R. ,
× RELATED ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே...