×
Saravana Stores

வருடாந்திர பிரம்மோற்சவம் முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி கோயிலில் 7ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 7ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சம் வரும் 10ம்தேதி தொடங்கி வரும் 18ம்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை மறுதினம் (7ம்தேதி) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெற உள்ளது. அன்று அதிகாலை தாயாருக்கு சகஸ்ரநாமார்ச்சனை நடக்கிறது.

காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதில் கோயில் வளாகம், சுவர், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்படும். பிறகு நாம கட்டி, திருச்சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைகற்பூரம், கட்டி கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். அதன்பின்னர், காலை 9.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக குங்குமார்ச்சனை சேவை மற்றும் விஐபி தரிசனங்களை ரத்து செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ.3.14 கோடி காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 70,020 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 34,014 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் 3.14 கோடி காணிக்கை கிடைத்தது. தொடர்ந்து இன்றும் விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் 31 அறைகளும் நிரம்பி உள்ளதால் 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசித்தனர்.

The post வருடாந்திர பிரம்மோற்சவம் முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி கோயிலில் 7ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் appeared first on Dinakaran.

Tags : Alvar Thirumanjanam ,Padmavathi Temple ,Thiruchanur ,Brahmotsavam ,Tirumala ,Tiruchanur ,Tirupati… ,Alvar ,Thirumanjanam ,Tiruchanur Padmavathi temple ,
× RELATED திருச்சானூரில் 5ம் நாள் வருடாந்திர...