×

குறுகிய காரணத்தை சுட்டிக்காட்டி கருணை அடிப்படையில் வேலை நீர்த்துப்போக செய்யக்கூடாது: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடை அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்த மதன், கடந்த 2013ல் பணியின்போது மாரடைப்பால் காலமானார்.
கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்க கோரி அவரது மனைவி விண்ணப்பித்தார். பின்னர் அவர் விபத்தில் சிக்கி நடமாட முடியாத நிலை ஏற்பட்டதால், மகள் சனிதாவிற்கு வேலை வழங்கக் கோரி கோவை மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சனிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரரின் தாய் விபத்தில் சிக்கி பணி செய்ய முடியாத நிலையில், அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி விண்ணப்பித்ததில் தவறு இல்லை.

பணியில் இருக்கும் நபர் திடீரென உயிரிழக்கும் பட்சத்தில் அவரது குடும்பம் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களை கூறி நீர்த்துப்போக செய்யக்கூடாது. இந்த விவகாரத்தில் கால சூழல் மாறியதற்கு ஏற்ப அரசு முடிவெடுத்திருக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் மனுதாரருக்கு ஆறு வாரங்களில் பணி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post குறுகிய காரணத்தை சுட்டிக்காட்டி கருணை அடிப்படையில் வேலை நீர்த்துப்போக செய்யக்கூடாது: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madan ,Sethumadai Government School ,Pollachi ,Coimbatore ,
× RELATED அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது...