×

நள்ளிரவில் குலுங்கியது நேபாளம் நிலநடுக்கத்தில் 157 பேர் பலி: உ.பி., டெல்லி, பீகாரும் அதிர்ந்தது

காத்மாண்டு: நேபாளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 157 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நில அதிர்வு டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகாரிலும் உணரப்பட்டது. அண்டை நாடான நேபாளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய தகவலின் படி, தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோடு மாவட்டத்தில் இரவு 11.47 மணி அளவில் நிலநடுக்கம் பதிவானது. 6.4 ரிக்டர் அளவிலான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்விரு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து, 157 பேர் பலியாகி உள்ளனர். ஜாஜர்கோட்டில் உள்ள நல்காத் நகராட்சியின் துணை மேயர் சரிதா சிங்கும் பலியாகி உள்ளார். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக உடனடியாக ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. நேபாள ராணுவம், காவல் துறையுடன் பொதுமக்களும் இணைந்து, வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சாலைகள், பாலங்கள் உடைந்துள்ளதால் சில பகுதிகள் துண்டிக்கப்பட்டு மீட்பு பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசந்தா நேற்று காலை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகள் செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து 159 நிலஅதிர்வுகள் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதால் விடிய விடிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும், இந்தியாவில் டெல்லி, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உபியின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பீகாரில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதியில் தஞ்சமடைந்தனர். ஆனாலும், இந்தியாவில் உயிர்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9,000 பேர் பலியாகினர். அதன் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமாக நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post நள்ளிரவில் குலுங்கியது நேபாளம் நிலநடுக்கத்தில் 157 பேர் பலி: உ.பி., டெல்லி, பீகாரும் அதிர்ந்தது appeared first on Dinakaran.

Tags : 157 ,Nepal ,UP, Delhi, Bihar ,KATHMANDU ,UP ,Delhi, Bihar ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...