×

ரச்சின் – வில்லியம்சன் அதிரடி வீண் டிஎல்எஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி: ஃபகார் – பாபர் அபார ஆட்டம்

பெங்களூரு: ஐசிசி உலக கோப்பையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 402 ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து டிஎல்எஸ் விதிப்படி பாகிஸ்தான் 21 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.  எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. கான்வே, ரச்சின் இணைந்து நியூசி. இன்னிங்சை தொடங்கினர். கான்வே 35 ரன்னில் வெளியேற, ரச்சின் – வில்லியம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 180 ரன் சேர்த்தது.

வில்லியம்சன் 95 ரன் (79 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ரச்சின் 108 ரன் (94 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த டேரில் மிட்செல் 29, மார்க் சாப்மேன் 39, கிளென் பிலிப்ஸ் 41 ரன் விளாசி விக்கெட்டை இழந்தனர். நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன் குவித்தது. சான்ட்னர் 26 ரன், லாதம் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது வாசிம் 3, ராவுப், இப்திகார், ஹசன் அலி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 402 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அப்துல்லா, ஃபகார் ஜமான் இணைந்து துரத்தலை தொடங்கினர். அப்துல்லா 4 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் வில்லியம்சன் வசம் பிடிபட்டார். ஃபகார் ஜமான் – கேப்டன் பாபர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. பாகிஸ்தான் 21.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்தது. பாகிஸ்தான் 25.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்திருந்தபோது கனமழை கொட்டியதால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஃபகார் 126 ரன் (81 பந்து, 8 பவுண்டரி, 11 சிக்சர்), பாபர் 66 ரன்னுடன் (63 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் டிஎல்எஸ் விதிப்படி பாகிஸ்தான் 21 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டு 2 புள்ளிகள் வழங்கப்பட்டது.ஃபகார் ஜமான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துள்ளது.

The post ரச்சின் – வில்லியம்சன் அதிரடி வீண் டிஎல்எஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி: ஃபகார் – பாபர் அபார ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Rachin-Williamson ,Pakistan ,DLS ,Fakhar ,Babar ,Bengaluru ,ICC World Cup ,New Zealand ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா