×

நான் தலைமை பொறுப்புக்கு வருவதை சிவன் தடுக்க முயன்றார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் சுயசரிதையில் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: நான் தலைமை பொறுப்புக்கு வருவதைத் தடுக்க முன்னாள் தலைவர் சிவன் முயற்சித்தார் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் தனது சுயசரிதையில் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரோ தலைவரான எஸ். சோம்நாத் ‘நிலாவு குடிச்ச சிங்கங்கள்’ என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி இருக்கிறார். அதில் சந்திரயான் 2 தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும், முன்னாள் தலைவர் சிவன் குறித்தும் பரபரப்பு தகவல்களை குறிப்பிட்டு உள்ளார். சுயசரிதையில் உள்ள சில முக்கிய விவரங்கள் வருமாறு:

இஸ்ரோவின் தலைவராக நான் வருவதை தடுக்க முன்னாள் தலைவர் சிவன் முயற்சித்தார். 2018ல் எஸ்.எஸ். கிரண்குமார் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றபோது 60 வயது முடிந்து பணி நீட்டிப்பில் இருந்த சிவனின் பெயருடன் எனது பெயரும் தலைவர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது எனக்கு இஸ்ரோ தலைவர் பதவி உறுதியாக கிடைக்கும் என்று கருதினேன். ஆனால் சிவனுக்குத் தான் அந்த பதவி கிடைத்தது. 3 வருடம் இஸ்ரோவின் தலைவராக இருந்த பிறகு ஓய்வு பெறுவதற்கு பதிலாக அந்த பதவியில் நீடிக்க சிவன் முயற்சித்தார்.

அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான நேரம் வந்தபோது யு.ஆர்.ராவ் விண்வெளி ஆய்வு இயக்குனரை விண்வெளி ஆணையத்திற்கு கொண்டு வந்தது எனக்கு இஸ்ரோ தலைவர் பதவி கிடைக்காது என்பதை உணர்த்துவதற்காகத் தான் என நான் கருதுகிறேன்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘என்னுடன் பணியாற்றியவர்களிடம் கேளுங்கள் ’: சோம்நாத் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

இது தொடர்பாக நான் எதனையும் சொல்ல விரும்பவில்லை, நான் சொல்வதை விட என்னுடன் பணியாற்றியவர்கள் இஸ்ரோவில் இப்போதும் பணியாற்றுகின்றனர், அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர் (சோம்நாத்) கூறியுள்ளது எவ்வளவு தூரம் உண்மை என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நான் பதில் சொல்வதைவிட வேறு நபர்கள் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சுயசரிதை வெளியீட்டு விழா நிறுத்தம்
கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு புத்தக நிறுவனம்தான் சோம்நாத்தின் சுயசரிதையை நூலாக வெளியிடுகிறது. நேற்று சார்ஜாவில் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதில் சிவன் குறித்த சோம்நாத்தின் கருத்துக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டதாகவும், வெளியான பிரதிகளை உடனடியாக திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வெளியீட்டு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டதாகவும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

The post நான் தலைமை பொறுப்புக்கு வருவதை சிவன் தடுக்க முயன்றார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் சுயசரிதையில் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Shivan ,ISRO ,Somnath ,Thiruvananthapuram ,Indian Space Research Centre ,Dinakaran ,
× RELATED உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல்,...