×

சவாலுக்கு சவால் மபியில் மல்லுக்கட்டும் விஐபிக்கள்: காங்கிரசை வீழ்த்த பா.ஜ புதுரூட், அமைச்சர்கள் மோதும் தொகுதிகள்

230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரே கட்டமாக நவ.17ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2020 மார்ச் மாதம் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் அப்போதைய கமல்நாத் அரசு கவிழ்ந்தது. இப்போது அதற்கு பதில் சொல்லும் காலம். பா.ஜ முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான அணிக்கு மக்கள் என்ன பதில் சொல்ல காத்திருக்கிறார்கள் என்பது டிச.3ம் தேதி ஓட்டு எண்ணும் போது தெரிந்து விடும். காங்கிரசில் இருந்து விலகி ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பா.ஜவில் இணைந்த பெரும்பாலான எம்எல்ஏக்கள், தலைவர்கள் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி வந்து விட்டனர்.

மேலும் பா.ஜவின் பழம்பெரும் தலைவர்கள் கூட சீட் கேட்டு காங்கிரஸ் வாசலில் நின்றது இந்தமுறை மபி கண்ட அதிசயம். இதனால் களம் காங்கிரசுக்கு சாதகம் என்றாலும் தேர்தலை எளிதில் கைவிட்டுவிடாது பா.ஜ என்பது கடந்த கால வரலாறு. இருதரப்பிலும் எக்கச்சக்க ஸ்டார் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் ஸ்டார் வேட்பாளர்களை வீழ்த்தபா.ஜ சார்பில் ஒன்றிய அமைச்சர்கள்உள்பட பலர் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பார்க்கலாம்.

1 புத்னி: மபியின் நீண்டகால முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தொகுதி. 1990ல் முதல்முறையாக இங்கு களம் கண்டு வென்றவர். அதன்பின் 2006 முதல் இப்போது வரை அந்த தொகுதியில் அவர் தான் எம்எல்ஏ. குறிப்பாக 1985 முதல் அங்கு பா.ஜ தான் வெற்றி பெற்று வந்துள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விக்ரம் மஸ்தால் நிறுத்தப்பட்டுள்ளார்.

2 திமானி: ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரவீந்திராசிங் தோமர் களமிறக்கப்பட்டுள்ளார். போட்டி கடுமையாக இருப்பதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.

3 நிவாஸ்: ஒன்றிய கிராமப்புற மேம்பாட்டுத்துறை இணைஅமைச்சர் பக்கான் சிங் குலாஸ்தே அங்கு நிறுத்தப்பட்டுள்ளார். 2003ல் இருந்து இந்த தொகுதியில் பக்கான்சிங் குலாஸ்தே சகோதரர் ராம்பியார் குலாஸ்தே வெற்றி பெற்ற தொகுதி. 2018ல் அவரிடம் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செயின் சிங் வார்கடே தொகுதியை கைப்பற்றி எம்எல்ஏவானார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

4 நரசிங்பூர்: ஒன்றிய இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் லகான்சிங் பட்டேல் களம் இறக்கப்பட்டுள்ளார்.

5 இந்தூர் 1: இந்த தேர்தலில் சீட் வேண்டாம் என்ற பா.ஜ தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். சிட்டிங் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் சுக்லாவை வீழ்த்த பா.ஜவின் அஸ்திரம் அவர். எடுபடுமா என்பது தேர்தல் முடிவில் தெரியும்.

6 சிந்த்வாரா: காங்கிரஸ்முன்னாள் முதல்வர் கமல்நாத் இங்கு மீண்டும் போட்டியிடுகிறார். பா.ஜ சார்பில் விவேக் பண்டி சாகு நிறுத்தப்பட்டுள்ளார்.

7 ஜபல்பூர் மேற்கு: பா.ஜ எம்பி ராகேஷ் சிங் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். 2013 முதல் இங்கு தொடர்ந்து வெற்றி பெற்று வரும் காங்கிரஸ் எம்எல்ஏ தருண் பனோட்டை வீழ்த்தத்தான் இந்த ஏற்பாடு.

8 ஹோசங்காபாத்: மபி சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் சிதாசரண் சர்மா இங்கு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். 1990 முதல் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுவரும் முதுபெரும் பா.ஜ தலைவர். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிரிஜா சங்கர் சர்மா நிறுத்தப்பட்டுள்ளார்.

9 கடார்வாரா: ஹோசங்காபாத் பா.ஜ எம்பி உதய்பிரதாப் சிங் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். காரணம் காங்கிரஸ் எம்எல்ஏ சுனிதா பட்டேலுக்கு தொகுதியில் கிடைத்த நல்ல பெயர். காங்கிரஸ் சார்பில் சுனிதாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

10 ரகோகார்க்: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மகன் ஜெய்வர்தன் சிங் வெற்றி பெற்ற தொகுதி. மீண்டும் அவர் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ சார்பில் ஹிரேந்திராசிங் பாண்டி பன்னா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

11 ஹில்சிப்பூர்: காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏவும், மன்னர் பரம்பரையை சேர்ந்தவருமான பிரவரத் சிங் அங்கு நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ சார்பில் ஹஜாரிலால் டான்கி நிறுத்தப்பட்டுள்ளார்.

12 தேவதாலேப்: மபி சட்டப்பேரவை சபாநாயகர் கிரிஷ் கவுதம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பத்மேஷ் கவுதம் நிறுத்தப்பட்டுள்ளார்.

13 கார்காபூர்: மபி முன்னாள் முதல்வர் உமாபாரதியின்மருமகன் ராகுல்சிங் லோதி இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து சண்டா சிங் கவுர் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

* போட்டியிடும் கட்சிகள்
மபி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 230 தொகுதியிலும் பா.ஜ, காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ்(178), ஜிஜிபி(52) இணைந்து 230 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஆம்ஆத்மி 69 தொகுதியிலும், சமாஜ்வாதி 80 தொகுதியிலும் மார்சிஸ்ட் 4 தொகுதியிலும், இகம்யூனிஸ்ட் 9 தொகுதியிலும், அகில இந்திய மஜ்ஜிலிஸ் கட்சி 2 தொகுதியிம், ஐக்கிய ஜனதாதளம் 5 தொகுதியிலும், ஆசாத் சமாஜ் கட்சி 80 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

The post சவாலுக்கு சவால் மபியில் மல்லுக்கட்டும் விஐபிக்கள்: காங்கிரசை வீழ்த்த பா.ஜ புதுரூட், அமைச்சர்கள் மோதும் தொகுதிகள் appeared first on Dinakaran.

Tags : BJP Pudurood ,Congress ,Madhya Pradesh Legislative Assembly ,BJP ,Pudurood ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...