×

80 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ரேஷன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

துர்க்: அடுத்த மாதம் காலாவதியாக இருந்த நிலையில், 80கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ரேஷன் திட்டமான கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சட்டீஸ்கரில் துர்க் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: பாஜ ஆட்சி அமைத்தபோது வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. வறுமையை போக்குவதற்காக ஏழைகளின் உணவு பாதுகாப்பு திட்டமான கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டனர்.

என்னை பொறுத்தவரை ஏழைகள் தான் மிகப்பெரிய சாதி. நான் அவர்களது சேவகன். ஏழைகள் எப்படி பிரதமருடன் நண்பர்களாக இருக்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறார்கள். கொரோனா காலத்தின் போது, ​​​​ஏழைகளின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன உணவளிப்பார்கள் என்பதுதான். இதை அறிந்த நான் எந்த ஏழையையும் பசியுடன் தூங்க விடமாட்டேன் என்று முடிவு செய்தேன். எனவே பாஜ அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தை தொடங்கியது.

இன்றும் லட்சக்கணக்கான ஏழைகள் இலவச அரிசியும் உளுந்தும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்கள் மத்தியில் இருந்து வெளி வந்த உங்கள் மகன் முடிவு செய்துவிட்டான். அடுத்த மாதம் முடியும் அந்த திட்டத்தை பாஜ அரசு நீட்டிக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும். நாட்டில் எங்கு சென்றாலும், இலவச ரேஷன் கிடைக்கும் வகையில் பாஜ அரசு ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ வசதியை நான் வழங்கி உள்ளேன். ஆனால் காங்கிரஸ் ஏழைகளை வெறுக்கிறது. இவ்வாறு பேசினார்.

* மகாதேவ் பெயரை கூட விட்டுவைக்கவில்லை
மகாதேவ் ஆப் மூலம் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ரூ.508 கோடி பெற்றதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டது குறித்து பேசிய பிரதமர் மோடி,’வாக்குகளை பெறுவதற்காக நாட்டில் உள்ள ஏழை மக்களை காங்கிரஸ் உணர்வுபூர்வமாக கையாளுகிறது.காங்கிரஸ் கட்சியானது என்னையும், ஒட்டு மொத்த இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தையும் துஷ்பிரயோகம் செய்கிறது. இதனால் தான் அவர்கள் சாதி என்ற புதிய விளையாட்டை தொடங்கி உள்ளனர்.சட்டீஸ்கர் மக்களை கொள்ளையடிக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் அரசு விட்டுவைக்கவில்லை. மகாதேவ் என்ற பெயரை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. மகாதேவ் என்ற பந்தய ஆப் மூலமாக ஈட்டப்பட்ட ஏராளமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

* ஓவியம் கொண்டு வந்த சிறுமிக்கு பிரதமர் கடிதம்
சட்டீஸ்கரின் கான்கெர் நகரில் நேற்று முன்தினம் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் அகன்ஷா என்ற சிறுமி பிரதமரின் ஓவியத்தை எடுத்து வந்திருந்தார். ஓவியம் கொண்டு வந்த சிறுமிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதி இருக்கிறார். இதில், சட்டீஸ்கர் மக்களிடம் எப்போதும் மிகுந்த அன்பை பெற்றிருக்கிறேன். அவர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்வத்துடன் பங்களித்துள்ளனர். அடுத்த 25 ஆண்டுகள் உங்களை போன்ற இளம் நண்பர்களுக்கும் நாட்டிற்கும் மிக முக்கியமானதாக இருக்கும். எங்களது இளம் தலைமுறை குறிப்பாக உங்களை போன்ற மகள்கள் அவர்களின் கனவுகளை நனவாக்கும் போது நாட்டின் எதிர்காலத்துக்கு புதிய வழிகாட்டுதலை வழங்குவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post 80 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ரேஷன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Durg ,Gharib ,Dinakaran ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...