×

நம்மாழ்வார்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் விரைவில் தையல், கணினி பயிற்சி துவங்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்


பெரம்பூர்: சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது பல இடங்களில் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்த குறைபாடுகளை கூறி உடனே சரிசெய்யவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள வகுப்பறைகள் மற்றும் மைதானங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கும் வகையில் பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேவையான அடிப்படை தேவைகள், மாணவர்கள் பயில்வதற்கு உண்டான உபகரணங்கள், குடிநீர் வசதி கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொழிற்பயிற்சிக்காக திறன் மேம்பாட்டு சார்பில் தையல் பயிற்சியும் கணினி பயிற்சியும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இங்கே துவங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சிக்கு வருபவர்களுக்கு தொழில் பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். தொழில் பயிற்சி பெற வருபவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. ஆகவே இதனை ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுடன் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

துறை சார்பில் தருகின்ற நிதியையும் கூடுதலாக பணத்தையும் பெற்று இந்த கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த உள்ளோம். இந்த கல்லூரி ஐந்தரை ஏக்கர் நிலம் உள்ள பெரிய கல்லூரி என்பதால் பயன்பாட்டில் இல்லாத இடத்தை ஆய்வு செய்து மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது தாயகம் கவி எம்எல்ஏ, மேயர் பிரியா, சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் ரமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

The post நம்மாழ்வார்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் விரைவில் தையல், கணினி பயிற்சி துவங்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Nammalwarpet ,Minister ,PK Shekharbabu ,Perambur ,Hindu ,Religious Charities ,P.K. Shekharbabu ,Government Multipurpose Technical College ,Otteri Nammalwarpet, Chennai ,
× RELATED சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு...