×

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, காவிரி மேலாண்மை ஆணையக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று (3.11.2023) நடைபெற்றது. அதில் த‌மிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு அக்டோபரில் 140.099 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 56.394 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 83.705 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது.

மேட்டூர் அணையில் 18 டிஎம்சிக்கும் குறைவான அளவில் நீர் இருப்பு உள்ளது. த‌மிழக விவசாயிகளின் நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார். அதற்கு கர்நாடக அரசின் தரப்பில், ‘‘கர்நாடகாவில் கடும்வறட்சி நிலவுகிற‌து. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதிஆகிய அணைகளில் குறைந்த அளவில்தான் நீர் இருப்பு உள்ளது.கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. எனவே தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது. தற்போது அணையில் இருக்கும் நீரைக் கொண்டே குடிநீர் மற்றும்விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

மேகேதாட்டுவில் புதிதாக‌ அணை கட்டினால் மழைக்காலங்களில் அதிகளவில் நீரை தேக்க முடியும். வீணாக கடலில் காவிரி நீர் கலப்பதை தடுக்க முடியும். எனவே மேகேதாட்டுவில் அணைக் கட்ட அனுமதிக்கவேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் “காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு, மேகதாது அணை திட்டத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் விவரிப்போம்,” என்று கூறி இருந்தார். இதே கருத்தை மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் முன் வைத்து இருக்கிறது. மேகேதாட்டு அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருவது கண்டனத்திற்குரியது.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து முற்றாக பாதிக்கப்படும். வறட்சிக் காலங்களில் நீர் பங்கீடு குறித்து காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் தெளிவான உத்தரவை அளித்துள்ளது.அதன் அடிப்படையில்தான் காவிரி மேலாண்மை ஆணையம்,‘ ‘தமிழகத்தின் விவசாய தேவைக்காக கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து நவம்பர் 23-ம் தேதிவரை விநாடிக்கு 2,600 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி,கர்நாடக மாநிலம் காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசின் நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Caviar Management Commission ,Waigo ,Chennai ,Caviri ,Caviri Management Commission ,Caviar ,Waiko Emphasis ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...