×

திருடிய ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற 3 வாலிபர்களுக்கு தர்ம அடி ஒடுகத்தூரில் பரபரப்பு குடியாத்தத்தில் கொட்டகைக்குள் புகுந்து

ஒடுகத்தூர், நவ.4: குடியாத்தத்தில் கொட்டகைக்குள் புகுந்து திருடிய 2 ஆடுகளை நேற்று ஒடுகத்தூர் சந்தையில் விற்க முயன்ற 3 வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை கொண்டுவந்து விற்பதும், வாங்கிச் செல்வதும் வழக்கம். இதனால் வாரந்தோறும் ₹25 லட்சம் வரை வியாபாரம் நடக்கிறது. இதேபோல், நேற்று காலையும் வழக்கம்போல் ஆட்டுச்சந்தை கூடியது. எனவே, பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், ஆட்டோ, டூவீலர் உட்பட வாகனங்களில் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அதேபோல், 3 வாலிபர்கள் பைக்கில் 2 ஆடுகளுடன் வந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்த வியாபாரிகளை அணுகி, `இந்த 2 ஆடுகளையும் நாங்கள் வளர்த்து வருகிறோம். அவசர பணத்தேவைக்காக இவற்றை விற்க வந்துள்ளோம்’ எனக் கூறியுள்ளனர். மேலும், 2 ஆடுகளையும் ₹17 ஆயிரத்திற்கு கொடுக்க முடிவு செய்து பேரம் பேசினர். அப்போது, அங்கு வந்த ஒருவர், இந்த 2 ஆடுகளும் எனக்கு சொந்தமானவை, இவற்றை திருடிவந்து விற்கின்றனர்’ என கத்தி கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட வியாபாரிகள் அந்த 3 வாலிபர்களை கையும், களவுமாக பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆடுகள் திருடியதாக கூறப்படும் 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரை சேர்ந்த அஜீத்(19), போஸ்(20), சந்துரு(19) என்பதும், இவர்கள் சேத்துவண்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரது கொட்டகையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக 2 ஆடுகளை திருடி பைக்கில் கொண்டு வந்து நேற்று ஒடுகத்தூர் சந்தையில் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார், 3 வாலிபர்களையும் குடியாத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, குடியாத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடி வந்த ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

The post திருடிய ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற 3 வாலிபர்களுக்கு தர்ம அடி ஒடுகத்தூரில் பரபரப்பு குடியாத்தத்தில் கொட்டகைக்குள் புகுந்து appeared first on Dinakaran.

Tags : Dharma Adi Odukathur ,Odugathur ,Gudiyattam ,
× RELATED காளை விடும் திருவிழாவில் ஆக்ரோஷமாக...