×

₹4 லட்சம் குட்கா பொருட்கள் காரில் கடத்தல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது வந்தவாசி அருகே பெங்களூரில் இருந்து

வந்தவாசி, நவ. 4: வந்தவாசி அருகே பெங்களூரில் இருந்து ₹4 லட்சம் குட்கா பொருட்களை காரில் கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயனுக்கு நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து ஒரு காரில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் கடத்தி, வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் விற்பனைக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்பி கார்த்திகேயன் வந்தவாசி உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தெள்ளார் தனிப்பிரிவு ஏட்டு விநாயகம் ஆகியோர்களை உஷார் படுத்தினார்.

இதனைதொடர்ந்து உட்கோட்ட குற்றப்பிரிவு ஏட்டுகள் முருகன், வெங்கடேசன், அயாத், அன்பு ஆகியோர் கொண்ட படையினர் வந்தவாசி அடுத்த தெள்ளார் தேசூர் நெடுஞ்சாலை அகரக்கோட்டை கூட்டுசாலை பகுதியில் பதுங்கி வாகனங்களை கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது தெள்ளார் நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்து தப்பியோட முயன்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்து, அவர்களை தெள்ளார் காவல் நிலையம் அழைச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் 405 கிலோ எடை கொள்ளளவு கொண்ட ₹4 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்ததோடு ₹5 லட்சம் மதிப்பிலான காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோகாமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ‘ராஜஸ்தான் மாநிலம் ஜலோரி மாவட்டத்தைச் சேர்ந்த சோக்காராம் மகன் அரிஷ்குமார்(22), ஒட்டாராம் மகன் உமேஷ்துகுமார்(26) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வந்தவாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களும் வந்தவாசி டவுன் சீதாராமன் நாயுடு தெருவில் மொத்த வியாபாரம் செய்யும் சங்கர்லால் என்பவரது உறவினர்கள் என தெரிய வந்தது. அவரது ஏற்பாட்டில் தான் தெள்ளார் பகுதியில் விற்பனை செய்ய பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து சங்கர்லாலை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

The post ₹4 லட்சம் குட்கா பொருட்கள் காரில் கடத்தல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது வந்தவாசி அருகே பெங்களூரில் இருந்து appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Bangalore ,Vandavasi ,Bengaluru ,Dinakaran ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி