×

ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஏராளமானோர் புனித நீராடல்

மயிலாடுதுறை: ஐப்பசி கடைசிமுழுக்கு தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை துலா கட்டத்தில் இன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரியில் நீராடுதல் மிக சிறப்புடையதாகும். மக்கள் தங்களது பாவங்களை போக்கியதால் மாசுபட்ட கங்கை வருத்தமடைந்து சிவபெருமானிடம் கூறியபோது மயிலாடுதுறை காவிரியில் நீராடினால் உனது பாவங்கள் அனைத்தும் போகும் என்று சிவபெருமான் கூறினாராம். அதன்படியே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் ஐப்பசி மாதத்தில் நேரடியாக மயிலாடுதுறை துலாக்கட்டத்துக்கு சென்று புனித நீராடியதாக ஐதீகம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் மயிலாடுதுறை துலா கட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி விமரிசையாக நடைபெறும். இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா கட்டத்தில் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதேபோல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 18ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரி, கடந்த 4ம் தேதி அமாவாசை தீர்த்தவாரி நடந்தது. இதைதொடர்ந்து கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கடைசி 10 நாள் உற்சவம் துவங்கி கடந்த 13ம் தேதி திருக்கல்யாண உற்சவம், நேற்று கோயில் தேரோட்டம் நடந்தது. இன்று காலை கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதையொட்டி திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத ஐய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர். காவிரி தெற்கு கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி முன்னிலையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மதியம் 1.30 மணியளவில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அப்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரியிலும் ஐப்பசி மாத கடைமுழுக்கு இன்று நடந்தது. பக்தர்கள் காவிரியில் புனித நீராடி ஐயாறப்பரை தரிசித்து சென்றனர்….

The post ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஏராளமானோர் புனித நீராடல் appeared first on Dinakaran.

Tags : Tirthawari ,Mayiladuthurai ,Aipasi ,Aippasi ,Vishtamukku Theerthawari ,Aipassi ,Tirthawari Mayiladuthurai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...