×

அண்ணாமலை நடைபயணத்துக்கு நன்கொடை கேட்டு ஆர்டிஓவை மிரட்டிய பாஜ பிரமுகர் கைது

பள்ளிபாளையம்: அண்ணாமலை நடைபயணத்துக்கு நன்கொடை கேட்டு வட்டார போக்குவரத்து அதிகாரியை மிரட்டிய பள்ளிபாளையம் பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த வெப்படையைச் சேர்ந்தவர் பாலு (எ) பாலகிருஷ்ணன்(55). இவர் பாஜ விவசாய அணியின் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர். இவர் மீது, பள்ளிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, வெப்படை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

அதில், கடந்த வாரம் பாஜ தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்துக்கு நன்கொடை தரும்படி கேட்டார். கொடுக்க மறுத்ததால், சமூக வலைதளத்தில் இழிவுபடுத்தி பதிவிடுவதாக மிரட்டினார். நேற்று முன்தினம் மாலை, வெப்படை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த பாலு, தனியார் பஸ்கள் விதிமுறை மீறி இயக்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை என கூறி, தகராறில் ஈடுபட்டதுடன், என்னை பணி செய்ய விடாமல் தடுத்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த வெப்படை எஸ்ஐ மலர்விழி, நேற்று பாலுவை கைது செய்து, குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, பாலுவை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

The post அண்ணாமலை நடைபயணத்துக்கு நன்கொடை கேட்டு ஆர்டிஓவை மிரட்டிய பாஜ பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Pallipalayam ,Namakkal… ,RTO ,
× RELATED மிகப்பெரிய ஆட்கள் பாஜகவுக்கு...