×

9 மாதம் கொக்கி போட்ட அதிமுக ; நடுங்கிய அண்ணாமலை திருச்சி சூர்யா சிவா மீண்டும் பாஜவில் ஐக்கியமானது எப்படி? பரபரப்பு பேட்டி

திருச்சி: அதிமுகவில் சேர இருந்த திருச்சி சூர்யா சிவா மீண்டும் பாஜவில் இணந்தது எப்படி? என்று பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். திருச்சியை சேர்ந்த சூர்யா சிவா, சென்னையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் இணைந்தார். தொடர்ந்து, அவருக்கு தமிழக பாஜவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டது. அதே பிரிவு தலைவர் டெய்சி சரணுக்கும், சூர்யா சிவாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில் திருச்சி சூர்யா ஆபாசமாக பேசியதோடு டெய்சி சரணுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார்.

இந்த ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜ ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி சூர்யா சிவாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவ.24ம் தேதி அண்ணாமலை அறிவித்தார். அதன்பின் சூர்யா சிவா தான் கட்சியில் இருந்து விலகுவதாக அவரே விருப்ப கடிதம் கொடுத்த நிலையில், அதை பாஜ தலைமை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக எந்தவித அரசியல் அசைவுகளும் இல்லாமல் அமைதியாக இருந்து வந்த திருச்சி சூர்யா சிவா மீண்டும் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கிட முடிவு செய்துள்ளதாகவும், அவர் அதிமுகவில் சேர உள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை நேரில் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி சூர்யா சிவா வகித்து வந்த அதே பதவியில் மீண்டும் தொடருவார் என்று நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார். ஆனால் அண்ணாமலையின் அறிவிப்பை சூர்யா சிவா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது. திட்டமிட்டப்படி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைவது உறுதி என சூர்யா சிவா தெரிவித்தாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் சூர்யா சிவா, தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் “பீனிக்ஸ் பறவையானேன்” என்ற தலைப்பின் கீழ் ‘‘தன்னை மீண்டும் அண்ணன் அரவணைத்து பீனிக்ஸ் பறவையாக மாற்றிவிட்டார்’’ என்ற வாசகங்களுடன், தனக்கு மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்புக்காகவும், பதவிக்காகவும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சூர்ய சிவாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் எனக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வந்துகொண்டிருந்தது. தமிழக பாஜவின் ஐ.டி.விங் தலைவராக இருந்த நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்த சமயத்தில் இருந்தே எனக்கும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. நான் பாஜவில் இருந்து விலகி கொள்கிறேன் என கொடுத்த கடிதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் வைத்திருந்தனர்.

இதற்கிடையே நான் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைத்தது. நானும் அதிமுகவுக்கு போகும் நிலை இருந்தது. ஆனால் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, எனக்கு மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை கொடுத்துள்ளார். மீண்டும் எனக்கு பொறுப்பை கொடுத்துவிட்டு அவர் கூறுகையில், ‘‘நான் உங்களிடம் எதை எதிர்பார்க்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். மீண்டும் களத்தில் உங்களை சந்திக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே நீங்கள் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்’’ என தெரிவித்தார். எனவே நானும் அவருடைய ஆணைக்கிணங்க என்னுடைய பணியை துவங்கிவிட்டேன். அண்ணாமலையை சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருச்சியில் அண்ணாமலையின் நடைப்பயணம் நடைபெற உள்ளது. எனவே அன்று முதல் மீண்டும் என்னுடைய முழுநேர அரசியல் பணியை துவங்க உள்ளேன். இவ்வாறு சூர்யா சிவா கூறினார்.

திருச்சி சூர்யா சிவா அண்ணாமலையின் நெருங்கிய நண்பராக இருந்தார். கட்சியில் இருந்து விலகிய பின்பு அண்ணாமலை குறித்து பல தகவல்களை வெளியிட போவதாக தெரிவித்தார். தற்போது அதிமுக – பாஜ கூட்டணி முறிந்து உள்ள நிலையில், அதிமுகவில் சூர்யா சிவா இணைந்தால் சூர்யா சிவா ரகசியங்களை வெளியிடுவார் என்று அஞ்சி மீண்டும் அவருக்கு அண்ணாமலை பதவி வழங்கி, அவரை சமாதானப்படுத்தி கட்சியில் சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

The post 9 மாதம் கொக்கி போட்ட அதிமுக ; நடுங்கிய அண்ணாமலை திருச்சி சூர்யா சிவா மீண்டும் பாஜவில் ஐக்கியமானது எப்படி? பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Trichy Surya Siva ,BJP ,Trichy ,Annamalai ,Dinakaran ,
× RELATED அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்