×

பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதால் நீக்கப்பட்ட திருச்சி சூர்யாவுக்கு பாஜகவில் மீண்டும் பதவி: அண்ணாமலை திடீர் அறிவிப்பு

சென்னை: கடந்த ஆண்டு பாஜவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சிக்கும், திருச்சி சூர்யாவுக்கும் இடையே சிறுபான்மை அணியில் பதவி வழங்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் பாஜ தலைமை விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து திருச்சி சூர்யா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்திற்கு நீக்கி கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் பாஜவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘திருச்சி சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க திருச்சி சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்’’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட நேர்ந்தால் தோல்வியை சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் பாஜகவில் இணைக்கும் பணியை கட்சி தலைமை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே திருச்சி சூர்யாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* நீக்கப்பட்ட மாவட்ட தலைவருக்கு பதவி
தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ ராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் இஎம்டி.கதிரவன், தமிழ்நாடு பாஜ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார் என்று கூறியுள்ளார். இவர் மீது தற்போதைய பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படையை அனுப்பி கொலை செய்ய முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதால் நீக்கப்பட்ட திருச்சி சூர்யாவுக்கு பாஜகவில் மீண்டும் பதவி: அண்ணாமலை திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy Surya ,BJP ,Annamalai ,Chennai ,Daisy ,
× RELATED திருப்போரூர் தொகுதியில் அண்ணாமலை இன்று பாதயாத்திரை