×

புதிய காப்பர் ஆலை, சோலார், காற்றாலை மின்சார உற்பத்தி முந்த்ராவில் அடுத்த 6 ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி புதிய முதலீடு: அதானி நிறுவனம் முடிவு

முந்த்ரா: குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடாவில் அதிகம் கேள்விப்படாத சிறிய ‘முந்தரா துறைமுகம்’ 1995ம் ஆண்டில் அதானி குழுமத்துக்கு கிடைத்தது. தற்போது இது, 35 ஆயிரம் ஏக்கரில் ‘அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட்’ என்ற பெயரில் பெரிய ராஜ்ஜியமாக உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த 1998 முதல் செயல்பட்டு வரும் இதில், இப்போது, 8 முனையங்களுடன், தினசரி 15- 20 என ஆண்டுக்கு 4,500 சரக்கு கப்பல்கள் கையாளப்படுகின்றன. இதற்காக, இங்கு 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தற்போது, 15.5 கோடி மெட்ரிக் டன் சரக்குகள் இதில் கையாளப்படுகின்றன.

சமீபத்தில், தனது வெள்ளி விழாவை அதானி துறைமுகம் நிறுவனம் கொண்டாடியது. இதை முன்னிட்டு, அடுத்த 6 ஆண்டுகளில் இந்த துறைமுகம் விரிவாக்கம், சூரிய மின், காற்றாலை மின் உற்பத்தி, புதிய காப்பர் தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களில் ரூ.3.5 – 4 லட்சம் கோடியை முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. இந்த துறைமுக பகுதியில் ‘அதானி காப்பர் லிமிடெட்’ மூலமாக, ரூ.8,700 கோடி செலவில் பசுமை காப்பர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதை கையாளவதற்காக, அதானி துறைமுகத்தில் தனி முனையமும் அமைக்கப்படுகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலமாக, இத்துறைமுகத்தில் தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர உள்ளது.

இதே முந்த்ரா பகுதியில் ‘அதானி நியூ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் மூலமாக, சோலார் பேனல் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இங்கு 19,400 சோலார் பேனல்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஆண்டுக்கு 4 ஜிகாவாட்ஸ் சூரிய மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 10 ஜிகாவாட்டாக உயர்த்த, விரிவாக்கப் பணிகள் செய்யப்பட உள்ளன. இங்கு தயாராகும் சோலார் பேனல்களில் 80 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. புதுப்பிக்கத்தக்க பசுமை மின்சார உற்பத்தி திட்டங்களில் அதானி நிறுவனம் தனிக்கவனம் செலுத்துகிறது.

தனது ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனம் மூலமாக, கட்ச் வளைகுடாவில் உள்ள பாலைவனப் பகுதியான காவ்டாவில் 72 ஆயிரம் ஏக்கரில் உலகின் மிகப்பெரிய சோலார், காற்றாலை மின்சார பூங்காவை உருவாக்கி வருகிறது. இது, ஆண்டுக்கு 20 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தை தயாரிக்கக் கூடியது. இங்கு அமைக்கப்படும் 54 காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான 162 இறக்கைகளை (பிளேடு) அதானி நிறுவனமே தயாரித்து தருகிறது. இப்பூங்காவில் 2030க்குள் ஆண்டுக்கு 45 ஜிகாவாட்ஸ் பசுமை மின்சாரத்தை தயாரித்து, குறைந்த விலைக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

* மீண்டும் பாக். கன்டெய்னர்
முந்த்ரா துறைமுகத்துக்கு 2021ல் ஈரானில் இருந்து வந்த சரக்கு கப்பலில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2998 கிலோ ஹெராயின் போதை பொருள் பிடிக்கப்பட்டது.இதையடுத்து, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து வரும் கன்டெய்னர்களை கையாள்வதில்லை என்ற முடிவை அதானி குழுமம் எடுத்தது. சுங்கத்துறை, கடலோர காவல் படை, கடற்படை ஆகியவை போதை பொருள் கடத்தலை தடுக்க தனிக்கவனம் செலுத்தி வருவதால், தற்போது இந்த நாடுகளில் இருந்து வரும் கன்டெய்னர்களை அதானி துறைமுகம் கையாள்கிறது.

The post புதிய காப்பர் ஆலை, சோலார், காற்றாலை மின்சார உற்பத்தி முந்த்ராவில் அடுத்த 6 ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி புதிய முதலீடு: அதானி நிறுவனம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Mundra ,Adani ,Mundara Port ,Gulf of Kutch, Gujarat ,Adani Group ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால்...