×

விளையாட்டு வீரர்களுக்கு என சிறப்பு பிரிவு உலக தரத்தில் சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனை: வருடத்துக்கு 250 ஆபரேஷன், பிற மாநிலத்தவர் சிகிச்சைக்காக சென்னை வருகை, அரசு மருத்துவர்கள் தகவல்


விளையாட்டு வீரர்களு க்கு போட்டி அல்லது பயிற்சியின்போது காயம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதுவே சில நேரங்களில் வீரர்களின் விளையாட்டு வாழ்க்கையை புரட்டிவிடுகிறது. பெரும்பாலும் விளையாட்டு வீரர்களுக்கு தசைநார் காயம் அதிகளவில் ஏற்படும். இது போன்று காயம் அடைந்து அதில் இருந்து குணமடைந்து மீண்டும் விளையாட செல்லும் வீரர்கள் 50% மேற்பட்ட வீரர்களுக்கு அணியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அந்தவகையில் அந்த வீரர்கள் மாற்று வீரர்களாகவும் அல்லது அணியில் சேர்க்காத வீரர்களாகவும் இருக்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில்,கடந்த 2015ம் ஆண்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு காயம் சிகிச்சைக்கென என தனி பிரிவு தொடங்கப்பட்டது. இந்த துறை சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பொதுச்சிகிச்சை, அறுவைச்சிகிச்சை என அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாதத்திற்கு 16 – 20 அறுவைசிகிச்சைகளும் வருடத்திற்கு கிட்டத்தட்ட 250 அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. இதை தவிர மாதம் 400 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கால்பந்து வீரர்கள், கூடைப்பந்து வீரர்கள், தடகள வீரர்கள், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு முழங்காலில் காயங்கள் ஏற்படும். குறிப்பாக, காயம் ஏற்பட்டவர்களுக்கு தசைநார் அறுவை சிகிச்சை, பல தசைநார் அறுவை சிகிச்சை, மேனிஸ்கேல் ரிப்பேர் அறுவை சிகிச்சை, டிபோர்மிட்டி கரெக்க்ஷன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதே போல கைப்பந்து, சிறகுபந்து, ஈட்டி எறிதல், எடை தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டு காரணமாக தோள்பட்டை தசைநார் காயம் ஏற்படுபவர்களுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் காயம்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பழனி மற்றும் பிரபாகர் சிங் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் ஒரு தசைநார் அறுவை சிகிச்சைக்கு 2 லட்சத்துக்கும் மேல் செலவு ஏற்படுகிறது. ஆனால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனைத்து அறுவை சிகிச்சைகளும் இலவசம். அறுவை சிகிச்சைகாக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் உலக தரம் வாய்ந்தவையாக உள்ளது. அறுவை சிகிச்சைமட்டுமின்றி அதற்கு தேவையான எம்.ஆர்.ஐ., பரிசோதனை, சிடி பரிசோதனை, ரத்த பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கமுடியாத காயத்துக்கு சிறப்பாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம்.

அண்டை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம். பொதுவாக தசைநார் அறுவை சிகிச்சைக்கு பிறகு 2 நாட்கள் மருத்துவர்கள் கண்கணிப்பில் இருப்பார்கள். அடுத்து 3 முதல் 6 வாரத்தில் அன்றாட பணிகள் மேற்கொள்ளலாம். அதேபோல், அடுத்து 6 மாதத்தில் மீண்டும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். இது தான் வழக்கமான ஒன்று. ஆனால் சிலர் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் அல்லது சிகிச்சை அளிக்காததால் அது பெரிய பிரச்னையாக மாறுகிறது. எனவே தசைநார் காயத்திற்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் மூட்டு வளைவுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

* ஜே.ஐ.சி.ஏ திட்டம்
ஜே.ஐ.சி.ஏ (JICA) திட்டம் மூலம் மருத்துவர்களுக்கு ஆர்த்ரோஸ்கோபி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு 2 அரசு மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற அரசு மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபிக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

* ஸ்டெம் செல் சிகிச்சை
தசைநார் முழுமையாக கிழியாமல் ஓரளவு கிழிந்து இருந்தால் ஸ்டெம் செல் சிகிச்சை முறையை பயன்படுத்தி அதை குணப்படுத்தி விடலாம். ரத்தம் மற்றும் எலும்பில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்லை பயன்படுத்தி இந்த தசைநார் காயத்தை குணப்படுத்தலாம். 2 ஆண்டுகளாக இந்த சிகிச்சை முறை அதிகரித்து வருகிறது. இதனை ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாக செய்து வருகிறது.

* தசைநார் கிழிந்ததன் அறிகுறிகள்
* வெளிப்புற பகுதி முழங்கால் மூட்டு வீக்கம்
* முழங்கால் மூட்டின் வெளிப்புறப் பகுதியில் வலி
* முழங்கால் மூட்டின் உறுதியற்ற தன்மை
* கால்களில் இயல்பான இயக்கம் இல்லாதது

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வீரர்களுக்கு முன்னுரிமை
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் இயங்கி வரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு காயம் சிகிச்சை துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மாதம் கிட்டத்தட்ட 5-6 நபர்கள் சிகிச்சைக்காக வருகை தருவார்கள். மாநில, இந்தியா அளவில் நடைபெறும் வீரர்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது. அனைத்து வீரர்களுக்கு சிகிச்சை தொடங்கியது முதல் இறுதி வரை சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post விளையாட்டு வீரர்களுக்கு என சிறப்பு பிரிவு உலக தரத்தில் சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனை: வருடத்துக்கு 250 ஆபரேஷன், பிற மாநிலத்தவர் சிகிச்சைக்காக சென்னை வருகை, அரசு மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Hospital ,Chennai ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...