×

கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு அங்காடி வளாகத்தில் உள்ள கனி அங்காடிகளில் கழிவுகள் அகற்றுவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். கோயம்பேடு வளாகத்தில் உள்ள 992 கனி அங்காடி கடைகளில் முறையாக கழிவுகள் அகற்றப்படுவது குறித்தும் தூய்மைப் பணிகள் நடைபெறுவது குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, சி.எம்.டி.ஏ செயற் பொறியாளார் ராஜான்பாபு உள்பட பலர் இருந்தனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது; 86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி, மலர், பழ அங்காடி என 3941 கடைகள் உள்ளது.

இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். பருவ மழைக் காலங்களை எதிர்கொள்ள கோயம்பேடு மொத்த சந்தையில் 2.5 கி.மீ. நீள மழைநீர் வடிகால் கட்ட வேண்டும் என கோரிக்கை உள்ளது. ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்வாயை தூர்வார வேண்டும் என்று பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, சில நாட்களில் தூர்வாரும் பணிகள் நிறைவு பெறும். கோயம்பேடு மொத்த அங்காடி மேம்பாட்டுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 13 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு, மீதம் உள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சந்தையில் காலியாக உள்ள கடைகள் மறு ஏலத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் கூடுதல் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி, தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தியுள்ளோம். மொத்த சந்தையில் ஒரு பகுதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளது.

உடனடியாக இடமாற்றம் செய்யும் திட்டம் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள மழைநீர் வடிகால் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 25 சதவீத பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் 15ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அங்கு சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் அனைத்தையும் வரும் 20ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். முதலமைச்சரின் தேதி பெற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கூறினார். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் மாடுகள் சுற்றித் திரிவது பற்றி கேட்டதற்கு, ‘’சமீபத்தில் மாடுகள் சாலைகள் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. முன்புபோல் மாடுகளுக்கு டேக் (எண்கள்) வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்’ என்று அமைச்சர் கூறினார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,PK Shekharbabu ,Koyambedu market ,Annanagar ,Hindu Religious Charities ,Chennai ,Koyambedu ,
× RELATED மெட்ரோ ரயில் பணி இடங்களில் மாற்று...