×

பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்.. 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: திருவண்ணாமலையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்திய 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள கடைவீதியில் நகை வாங்க ஆட்டோ ஓட்டுநர் ராஜா என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது குடும்ப தகராறு தொடர்பாக கணவன் – மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த காவல்துறையின் சண்டைக்கான காரணம் பற்றி தம்பதியிடம் கேள்வி கேட்டனர்.

அப்போது குடும்ப விவகாரம் என கூறிய அந்த தம்பதி மீது நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகிய 3 காவலர்கள் கண்மூடி தனமாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜா, அவருடைய மனைவி உஷா, மகன் சூரிய ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 காவலர்கள் அன்றைய தினமே வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் தனது குடும்பத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தராவிட கோரி ஓட்டுநர் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 3 காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ.50,000 வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். 2016ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் காவல்துறையினருக்கு சாதகமாக அப்போதைய அதிமுக அரசு நடந்து கொண்டதாகவும் அதனால் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் 3 காவலர்கள் மீது 12 வாரங்களுக்குள் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

The post பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்.. 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Caste ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் சாதிவாரி...