×

பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணி தீவிரம் தேர் ஸ்தபதிகள் நேரில் ஆய்வு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை, நவ.2: அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு, பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணியை மாநில தேர் ஸ்தபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, அடுத்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, 26ம் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று (23ம் தேதி) மாட வீதியில் பஞ்ச ரதங்கள் பவனி நடைபெறும். அதையொட்டி, தேரோட்டத்தின் தொடக்கமாக விநாயகர் தேர் பவனி நடைபெறும். அதைத்தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர் எனப்படும் மகா ரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை அடுத்தடுத்து மாட வீதியில் பவனி வரும். அதையொட்டி, பஞ்ச ரதங்களையும் பழுது நீக்கி, சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

அதன்படி, தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தெர், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றில் இருந்த பழுதுகள் கண்டறியப்பட்டு சீர் செய்யப்படுகிறது. சண்டிகேஸ்வரர் தேருக்கு புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், பஞ்சரதங்களை சீரமைக்கும் பணியை நேற்று மாநில திருத்தேர் ஸ்தபதி திருமழிசை கஜேந்திரன், மண்டல ஸ்தபதி கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தேர்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். அப்போது, கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள் மற்றும் அறநிலையத்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனடிருந்தனர். பஞ்ச ரதங்கள் சீரமைக்கும் பணி தொடர்பாக, ஸ்தபதிகள் ஆலோசனைகளை ஏற்று, அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

The post பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணி தீவிரம் தேர் ஸ்தபதிகள் நேரில் ஆய்வு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Stapatis ,Thiruvannamalai ,Karthikai Deepatri Vizah ,Annamalaiyar Temple Deepatri Festival ,Chariot Sthapathis ,Tiruvannamalai Karthikai Deepatri festival ,
× RELATED திருவண்ணாமலையில் கோரிக்கைகளை...