×

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் மறுப்பதால் மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி

சென்னை: சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் அனுமதி வழங்காததை தொடர்ந்து, இன்று நடைபெறும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை இணைவேந்தர் என்ற முறையில் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறேன் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாளை (இன்று) நடைபெற உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை இணைவேந்தர் என்ற முறையில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். பட்டமளிப்பு விழாவில், சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று கடந்த 18.8.23, 20.9.23ம் தேதிகளில் நடந்த பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அதற்கு பிறகும் ஆளுநர் நிராகரித்துள்ளார். சங்கரய்யாவை பற்றி ஆளுநருக்கு தெரியவில்லை என்றாலும், அவரை பற்றி கேட்டு தெரிந்திருக்கவேண்டும். அவர் 1922ல் பிறந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும்போது அதனை நிறுத்திவிட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 5 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அதுமட்டுமல்லாமல், சமூகநீதி, பொருளாதார சமத்துவத்துக்காக பலமுறை போராட்டங்களை சந்தித்து 4 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். ஆக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு, சுதந்திர போராட்ட வீரராக இருந்த ஒருவருக்கு, 102 வயதிலும் மக்களுக்கு குரல் கொடுத்துவரும் அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்துள்ளார். அவர் மறுத்தபிறகும், வழக்கத்தை மாற்றி மீண்டும் ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பது இல்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை பற்றி பேசுபவர்களை இவருக்கு பிடிப்பது இல்லை. அதனால்தான், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார். இந்த பட்டத்தை சங்கரய்யாவுக்கு கொடுக்க மறுப்பதற்கான காரணம் என்ன?. அதனை விளக்க ஆளுநர் தயாரா? அதை சொல்ல தைரியம் இல்லை. நீண்டகாலம் சமுதாயத்துக்காக போராடிய அவருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகைசால் தமிழர் விருது வழங்கினார். விருதுடன் ரூ.25 லட்சம் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொகையைகூட அவர் பெற்றுக்கொள்ளாமல், அரசின் நிதியுடன் சேர்த்து ஏழை, எளிய மக்களுக்கான தேவைகளுக்கு பயன்படுத்துங்கள் என்று கூறினார்.

அப்படி சொன்ன ஒருவருக்கு ஆளுநர் டாக்டர் பட்டம் கொடுக்க மறுப்பதை என்னவென்று சொல்வது?. தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை கொடுப்பது இல்லை என்று ஆளுநர் சொல்லியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர்கள் யாராக இருந்தாலும், திராவிட மாடல் ஆட்சியில் அவர்களுக்கு நல்லது செய்யப்பட்டு இருக்கிறது. பாரதியார், நடிப்பு சுதேசிகள் பலர் இருக்கிறார்கள் என்று பாடினார். அந்தவகையில் ஆளுநர் நடிப்பு சுதேசியாக இருப்பது வருந்தத்தக்கது. ஆளுநருக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருந்தால், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்?. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க நான் 2 முறை வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் ஆளுநரின் செவி ஏற்கவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரியாக இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் மீது மதிப்பு கிடையாது. அதில் இருந்து வந்தவர்தான் ஆளுநர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவாகத்தான் இதையெல்லாம் ஆளுநர் செய்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தினமும் பொய் சொல்வதை தொழிலாக கொண்டிருக்கிறார். ஆளுநர் என்பவர் பெயரளவுக்குதான் நிர்வாகம் செய்யமுடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைதான் உண்மையாக நிர்வாகம். இந்த நிர்வாகம் சொல்வதற்கு எல்லாம் கையெழுத்து போடுவதுதான்ஆளுநரின் வேலை. இதற்காகத்தான் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளோம். அடித்தள மக்கள் சார்ந்த பல்வேறு கோப்புகளுக்கு அவர் கையெழுத்து போடாமல் வைத்திருக்கிறார்.

மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்றால், அது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் வேண்டுமென்றால், தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்து, ஆர்.எஸ்.எஸ்., பாஜ கருத்துகளை பேசுங்கள். அதற்கு உங்களுக்கு தைரியம் கிடையாது. எங்கே போட்டியிட்டாலும் ‘டெபாசிட்’ போய்விடும். மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய அமைச்சரவை கொண்டு வருகின்ற சட்டங்களில் கையெழுத்திட மறுக்கிறார். இதைவிட மோசமான ஆளுநரை இதுவரை நான் பார்த்தது இல்லை. இவரை போல, பொய் பேசுகிறவரை யாரும் பார்க்க முடியாது. உண்மைக்கு புறம்பான செய்திகளை எடுத்துவைத்து, இந்த ஆட்சியின் மீது களங்கத்தை கற்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் செயல்படுகிறார்.

வேந்தர், இணைவேந்தர் பேசாமல், சிறப்பு விருந்தினரை மட்டும் பேச வைக்கும் பட்டமளிப்பு விழாவை எங்கேயாவது பார்த்து இருக்கிறீர்களா?. அதை இவர்தான் செய்கிறார். வேந்தர் என்ற பதவியை பயன்படுத்தி கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார். அதனால்தான் வேந்தருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அந்த வகையில்தான் பட்டமளிப்பு விழாவை எதிர்க்கிறோம். துணைவேந்தர் தேடுதல் குழுவில் யார் யாரெல்லாம் நியமிக்கப்பட வேண்டும் என்று அந்தந்த பல்கலைக்கழகத்தின் விதிகளில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அந்த விதியில் சொல்லப்பட்டதை தவிர, ஆளுநர் சிலவற்றை திணிக்க பார்க்கிறார்.

அதனால்தான் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் ஒருமனதாக சட்டத்தை நிறைவேற்றினோம். துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கு யு.ஜி.சி.க்கும் அதிகாரம் கிடையாது. பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட், செனட் என்ன டம்மியா?, அவர்களுக்கு அதிகாரம் இல்லையா?, சிண்டிகேட், செனட் நியமித்த தேடுதல் குழுவுக்கு அனுமதி அளிக்கவில்லை, அந்த குழுவில் வட இந்தியாவில் இருந்து ஒருவரை கொண்டு வந்து திணிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது திராவிட மாடல் என்றாலே ஆளுநருக்கு கசப்பாக இருப்பது தெரிகிறது. ஆகவேதான் இந்த வேலைகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் திராவிடத்தை யாராலும் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்தற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. ‘ஆளுநர் ஆர்.என்.ரவி, விதிகளை மீறி துணைவேந்தர்கள் தேடல் குழு அறிவிப்பை வெளியிடுகிறார். துணைவேந்தர்கள் கூட்டங்களை கூட்டுகிறார். ஒற்றை கருத்தியல் கொண்ட உறுப்பினர்களை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறார். அதனால், அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து நியாயமானது’ என சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பது இல்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை பற்றி பேசுபவர்களை இவருக்கு பிடிப்பது இல்லை. அதனால்தான், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார். இந்த பட்டத்தை சங்கரய்யாவுக்கு கொடுக்க மறுப்பதற்கான காரணம் என்ன? அதனை விளக்க ஆளுநர் தயாரா? அதை சொல்ல தைரியம் இல்லை.

The post சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் மறுப்பதால் மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Madurai Kamarajar University ,Sankaraya ,Minister ,Ponmudi ,Chennai ,Bonmudi ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...