×

190 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை நசுக்கியது தென் ஆப்ரிக்கா: முதலிடத்துக்கு முன்னேற்றம்

புனே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 32வது லீக் ஆட்டத்தி, நியூசிலாந்து அணியுடன் நேற்று மோதிய தென் ஆப்ரிக்கா 190 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கை விரலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால், இந்த போட்டியிலும் கேன் வில்லியம்சன் களமிறங்கவில்லை. குயின்டன் டி காக், கேப்டன் தெம்பா பவுமா இணைந்து தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 38 ரன் சேர்த்தது. பவுமா 24 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் டேரில் மிட்செல் வசம் பிடிபட்டார். அடுத்து டி காக் உடன் வாண்டெர் டுஸன் ஜோடி சேர்ந்தார். அபாரமாக விளையாடிய இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்க்க… தென் ஆப்ரிக்கா ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டி காக் இமாலய சிக்சருடன் நடப்பு தொடரில் தனது 4வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். டி காக் – டுஸன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 200 ரன் சேர்த்தது. டி காக் 114 ரன் (116 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் பிலிப்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லரும் அதிரடி காட்ட, தென் ஆப்ரிக்க ஸ்கோர் 300 ரன்னை கடந்தது. வாண்டெர் டுஸன் 133 ரன் (118 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்), டேவிட் மில்லர் 53 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

தென் ஆப்ரிக்கா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன் குவித்தது. கிளாஸன் 15 ரன், மார்க்ரம் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 2, போல்ட், நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்க இன்னிங்சில் மொத்தம் 26 பவுண்டரி, 15 சிக்சர்கள் பறந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து 50 ஓவரில் 358 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தென் ஆப்ரிக்க வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திணறியது.

வில் யங் 33 ரன், டேரில் மிட்செல் 24 ரன் எடுக்க… மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்து ஏமாற்றமளித்தனர். 6வது வீரராகக் களமிறங்கி, தனி ஒருவனாகப் போராடி அரை சதம் அடித்த கிளென் பிலிப்ஸ் 60 ரன் (50 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கோட்ஸீ பந்துவீச்சில் ரபாடா வசம் பிடிபட, நியூசிலாந்து 35.3 ஓவரில் 167 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் கேஷவ் மகராஜ் 9 ஓவரில் 46 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மார்கோ யான்சென் 3, கோட்ஸீ, 2, ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினர். வாண்டெர் டுஸன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 190 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

The post 190 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை நசுக்கியது தென் ஆப்ரிக்கா: முதலிடத்துக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : South Africa ,New Zealand ,Pune ,ICC World Cup ODI ,
× RELATED 2வது டெஸ்டிலும் அசத்தல் தொடரை வென்றது நியூசிலாந்து