×

கேரளாவில் நிதி நிலை மோசமாக இருந்தால் பொருளாதார நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் நிதி நிலை மோசமாக இருந்தால் பொருளாதார நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசிடம் அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள அரசின் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், அரசு போக்குவரத்து கழகத்திற்கு கடன் கொடுத்த வகையில் ரூ.900 கோடி பணம் வராததால் நிறுவனம் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், எனவே பணத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்திற்கு பண உதவி செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று பரிசீலித்த உயர்நீதிமன்றம், கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அரசின் விளக்கம் கேரளாவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அரசின் இந்த விளக்கத்தை வைத்துத் தான் தேசிய அளவில் கேரளா குறித்து பேசப்படும். நிதி நிலை மோசமாக இருந்தால் கேரளாவில் பொருளாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது. அரசு உத்திரவாதத்தை நம்பித்தான் போக்குவரத்து நிதி மேலாண்மை நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர்.இந்த நிலைமை நீடித்தால் கேரளாவில் யாரும் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். எனவே அரசு வேறு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

The post கேரளாவில் நிதி நிலை மோசமாக இருந்தால் பொருளாதார நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...