×

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டப்படும்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

பெங்களூரு: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் 100 சதவீதம் அணை கட்டியே தீருவோம் என்று மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பது மாநில அரசின் நீண்டகால திட்டமாகும். மழை காலத்தில் காவிரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரை இரு மாநில விவசாயிகள் பயன்படுத்திய பின், வீணாக கடலில் கலக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்டி தண்ணீர் சேமித்தால், பெங்களூரு உள்பட நான்கு மாவட்டங்களில் குடிநீர் தேவைக்கு கர்நாடகம் பயன்படுத்த முடியும். கேஆர்எஸ் அணைக்கு பின் மேகதாதுவில் கட்டும் அணையில் தண்ணீர் சேமித்தால் தமிழ்நாட்டிற்கு நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படும். தமிழ்நாட்டிற்கு திறக்கும் தண்ணீர் எந்த காரணம் கொண்டும் நிறுத்த மாட்டோம். அப்படி நிறுத்தினால் நீதிமன்ற உத்தரவை மீறியதாகும் என்பது மாநில அரசுக்கு தெரியும். இதை தமிழ்நாடு அரசும், தமிழக தலைவர்களும் புரிந்து கொள்ளாமல் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படும். மேகதாதுவில் அணை கட்ட மாநில அரசின் சார்பில் தயாரித்துள்ள திட்ட வரைவு, ஒன்றிய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது’ என்றார்.

The post எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டப்படும்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meghadatu ,Karnataka ,Deputy Chief Minister ,TK Sivakumar ,Bengaluru ,Cauvery ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம்: கி.வீரமணி