×

தீவிரவாத செயல்கள், பொருளாதார நெருக்கடியால் 17 லட்சம் ஆப்கான் அகதிகளை விரட்டும் பாகிஸ்தான்: எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்களால் சோகம்

இஸ்லாமாபாத்: தீவிரவாத செயல்கள், பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு, அந்நாட்டில் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கான் அகதிகளை வெளியேற்றும் வேலையில் இறங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானில் உரிய அனுமதியில்லாமல் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களுக்கு, ஆப்கானில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

அதனால் உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கான் மக்களை இன்றுக்குள் (நவ. 1) வெளியேற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்தது. பாகிஸ்தான் அரசின் இந்த அறிவிப்புக்கு, தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆப்கான் மக்களை விரட்டும் முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இன்றுடன் கெடு முடிவதால் பாகிஸ்தான் – ஆப்கான் எல்லையில் ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் தங்களது உடமைகளுடன் தஞ்சமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 2021ல் ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி வந்த பின்னர், பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் ஆவர். தற்போது அவர்களை பாகிஸ்தான் வெளியேற்றி வருவதால், அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் பாகிஸ்தான் – ஆப்கான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை 2 லட்சம் ஆப்கான் மக்கள் தங்களது நாட்டுக்கு திரும்பியுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய மக்களில் 80 சதவீதம் பேர் தாங்கள் கைது செய்யப்படலாம் என்று அச்சத்தால் வெளியேறி வருகின்றனர். சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், ஆப்கான் அகதிகளால் தீவிரவாத மற்றும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் இருந்து ஆப்கான் விரட்டப்படும் அகதிகள், தங்களது நாட்டுக்கு மீண்டும் திரும்பினால் கைது, தடுப்புக்காவல், சித்திரவதை ெகாடுமைகளை அனுபவிக்க நேரிடும் என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி கூறினார்.

The post தீவிரவாத செயல்கள், பொருளாதார நெருக்கடியால் 17 லட்சம் ஆப்கான் அகதிகளை விரட்டும் பாகிஸ்தான்: எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்களால் சோகம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...