×

ராஜஸ்தானில் ஆட்சியை தீர்மானிக்கும் ஆதிக்க சமூக வாக்குகள் யாருக்கு: 59 எஸ்சி, எஸ்டி தொகுதிகளை கைப்பற்ற போவது யார்?

ராஜஸ்தான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஜெய்ப்பூர் அரண்மனைதான். இது மன்னர்களின் வாழ்விடமாகும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இங்கு ஆட்சி செய்வதில் குறிப்பிட்ட சில சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஜாட் மற்றும் ராஜ்புத் சமூகத்தின் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது. இதனால்தான் இந்த பகுதி ‘ராஜபுதானா’ என்று அழைக்கப்படுகிறது. ராஜபுத்திரர்கள் ராஜஸ்தானின் நன்கு அறியப்பட்ட போர்வீரர்கள். ராஜபுத்திரர்கள் பண்டைய ஆளும் வம்சங்களின் வழித்தோன்றல்கள் மற்றும் ஆதிக்க வர்க்கம். 6.85 கோடி மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் ஜாட்கள் (14%), ராஜபுத்திரர்கள் (14%), மீனாக்கள் (8%), குஜ்ஜார்கள் (10%), பிராமணர் (6%), வைசியர்கள் (4%), யாதவர்கள் (3%), முஸ்லிம்கள் (10%), தலித் (17%), ஆதிவாசிகள் (5%) என உள்ளனர். ராஜபுத்திரர்களிலேயே தாக்கூர்கள் உயர்சாதியை சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரு ஆதிக்க சாதி. தாக்கூர் என்பது வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படும் மரியாதைக்குரிய சொல். இது சில சமயங்களில் பிராமணர்களை விவரிக்கப் பயன்படுகிறது.

இந்திய மக்கள் தொகையில் இந்து மற்றும் சீக்கிய ஜாட்கள் 2.9 முதல் 3 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர். ராஜபுத்திரர்கள் 6.5 கோடி பேர் உள்ளனர். ராஜபுத்திரர்கள் ஜாட்டை விட மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். ராஜ்புத், ஜாட், குஜ்ஜார்கள், மீனாக்கள், பிராமணர்களை கொண்டே ராஜஸ்தான் தேர்தல் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக எம்எல்ஏக்களாகி உள்ளனர். கடந்த 2018ல் நடந்த தேர்தலில் ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பாஜ சார்பில் 26 பேருக்கு சீட் வழங்கப்பட்டது. காங்கிரசில் 15 பேருக்கு சீட் வழங்கப்பட்டது. ராஜபுத்திரர்கள் பாஜவுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இதனால், 26 பேரில் 10 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் சார்பில் ராஜபுத் சமூகத்தை சேர்ந்தவர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர். ஜாட் சமூகத்தில் காங்கிரஸ் 32 வேட்பாளர்களை நிறுத்தி 18 வெற்றியும், பாஜ 29 வேட்பாளர்களை நிறுத்தி 12 வெற்றியும் பெற்றது.

200 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில், 37 இடங்களை ஜாட் சமூகத்தினரும், ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்கள் 17 இடங்களையும் கைப்பற்றினர். குறிப்பாக 31 தொகுதிகளை கொண்ட ஜாட் ஆதிக்கம் செலுத்தும் மார்வார் மற்றும் ஷேகாவதி பகுதிகளில் அந்த சமூகத்தைச் சேர்ந்த 25 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மீனாக்கள் மற்றும் குஜ்ஜார்கள், இரண்டு செல்வாக்கு மிக்க சமூகங்கள், பாஜ மற்றும் காங்கிரசுக்கு இடையே தங்கள் செல்வாக்கில் ஏற்ற இறக்கங்களைக் கண்டனர். பாஜ குஜ்ஜார் சமூகத்தில் 9 வேட்பாளர்களை நிறுத்தி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. காங்கிரஸ் 5 இடங்களை பெற்றது. மீனாக்கள் மாநிலத்தின் மிகப்பெரிய பழங்குடி சமூகம். இச்சமூகத்தை சேர்ந்த 18 பேர் கடந்த தேர்தலில் எம்எல்ஏக்களாகி உள்ளனர். இதில், காங்கிரசில் இருந்து 9 பேர், பாஜவில் இருந்து 5 பேர். பிராமணர் சமூகத்தில் 19 வேட்பாளர்களை நிறுத்திய பாஜவுக்கு 8 எம்எல்ஏக்களும், 22 வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரசுக்கு 9 எம்எல்ஏக்களும் கிடைத்தது. 15 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரசுக்கு 7 எம்எல்எக்கள் கிடைத்து உள்ளனர். பாஜவுக்கு ஒரே ஒரு முஸ்லிம் எம்எல்ஏதான்.

ராஜஸ்தானில் எஸ்சிக்கு 34 தொகுதியும், எஸ்டிக்கு 25 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓபிசியில் ஜாட் சமூகம் இணைக்கப்பட்டதுபோல், குஜ்ஜார்களையும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை 2018ம் ஆண்டு தேர்தலுக்கு முன் பாஜ அரசு நிறைவேற்றியது. ஓபிசியில் குஜ்ஜார்கள் சேர்க்கப்பட்டு இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. அதேபோல், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக ராஜஸ்தானில் போராட்டம் வெடித்தது. இந்த விவகாரத்தில், அப்போதைய ராஜஸ்தான் பாஜ அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனால் 2018 தேர்தலில் எஸ்சி, எஸ்டி தொகுதிகளில் பாஜ கடும் பின்னடைவை சந்தித்தது. அல்வார், பரத்பூர், தௌசா, தோல்பூர், கரௌலி, ஸ்வாய் மாதோபூர் மற்றும் டோங்க் மாவட்டங்களில் ஒரு எஸ்சி/எஸ்டி தொகுதியில் கூட பாஜ வெற்றி பெறவில்லை. எஸ்சி,எஸ்டி சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தும் ராஜஸ்தானின் கிழக்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2013 தேர்தலில் 35 எஸ்சி தொகுதியில் காங்கிரசால் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜ 32 தொகுதிகளை கைப்பற்றியது.

இம்மாநிலத்தை பொறுத்தவரை நிலையான தொடர் ஆட்சி என்பது இல்லை. காங்கிரஸ், பாஜ மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது பாஜவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே பாஜ மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பாஜவில் தொடர்ந்து கட்சி பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்ளாமல் உள்ளார். மேலும், நாடு முழுவதும் பாஜ மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. இது, பாஜவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசில் அனுபவமிக்க முதல்வர் அசோக் கெலாட் கட்சியினரை ஒன்றிணைத்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார். அதிருப்தியில் இருந்த சச்சின் பைலட்டை அழைத்து காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி சில அசைன்மென்ட்களை கொடுத்து உள்ளது. இதனால் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. ராகுலின் நடைபயணம், காங்கிரசுக்கு அடுத்தடுத்த மாநிலங்களில் வெற்றி போன்றவை அக்கட்சிக்கு தெம்பை கொடுத்து உள்ளது. இதனால் ராஜஸ்தானில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடிக்க பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிரமாக களமிறங்கி உள்ளது. எனினும் இங்குள்ள ஆதிக்க சாதிகளான பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியாக்கள், ஜாட்கள், குஜ்ஜார்கள், மீனாக்கள்தான் ஆட்சியை தீர்மானிக்க உள்ளனர். மக்களின் ஒரு விரல் புரட்சிக்கான விடை டிச.3ம் தேதி தெரிந்துவிடும்.

The post ராஜஸ்தானில் ஆட்சியை தீர்மானிக்கும் ஆதிக்க சமூக வாக்குகள் யாருக்கு: 59 எஸ்சி, எஸ்டி தொகுதிகளை கைப்பற்ற போவது யார்? appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,SC ,Jaipur Palace ,59 SC ,ST ,Dinakaran ,
× RELATED பலாத்கார வழக்கில் தலைமறைவான நிலையில்...