பல்லாவரம்: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தனியார் தோல் தொழிற்சாலையை மூட வேண்டும், என மாங்காடு நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பத்ரிமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாட்டின் தோல்களை பதப்படுத்தும் கூடமும், அதன் அருகிலேயே மாட்டின் கொழுப்பை உருக்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்கூடமும் செயல்பட்டு வந்தது.
இங்கு மாட்டின் கொழுப்பை உருக்கும்போது ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் ஏற்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மாங்காடு நகராட்சி அலுவலகத்தில் புகார்கள் தெரிவித்து வந்தனர்.
அத்துடன் அந்த தொழிற்கூடத்தின் அருகிலேயே பள்ளியும் உள்ளதால் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மாங்காடு நகராட்சி சுகாதார அலுவலர் காளிதாஸ் தலைமையிலான ஊழியர்கள், நேற்று அந்த தொழிற்கூடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தை சுற்றிலும் கடும் துர்நாற்றம் வீசியது.
பின்னர் அந்த தொழிற்கூடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மாட்டின் தோல்களின் மீது உப்பை போட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிகளவில் மாட்டு கொழுப்புகள் டின்களில் அடைத்து, சுகாதாரமற்ற முறையில் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இயங்கி வந்த அந்த தொழிற்கூடத்தை மூடுமாறு சுகாதார அலுவலர் காளிதாஸ் உத்தரவிட்டார்.
The post பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய தோல் தொழிற்சாலையை மூட உத்தரவு: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.