×

திருத்தணி அருகே அரசுப்பேருந்து சிறைபிடிப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

திருத்தணி: திருத்தணி அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி அடுத்து மிட்டக் கண்டிகை கிராமம் உள்ளது. திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, தினமும் காலை 6.15 மணிக்கு மிட்ட கண்டிகை கிராமத்துக்கு அரசுப் பேருந்து தடம் எண் டி9 இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து திருத்தணி பைபாஸ் சாலை, வேலஞ்சேரி, தாழவேடு, தும்பிக்குளம், பூனி மாங்காடு, நல்லாட்டூர் வழியாக மிட்ட கண்டிகை வரை சென்று வரும். இதேபோல், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 10.15 மணிளவில் அப்பேருந்து புறப்பட்டு 11 மணிக்கு மிட்ட கண்டிகைக்குச் செல்லும். இவ்வாறு ஒரு நாளைக்கு 3 முறை கிராமத்திற்கு அந்த பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து கடந்த சில மாதங்களாக சரியாக இயக்கப்படவில்லை. நல்லாட்டூரோடு திரும்பி விடுகிறது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி கமலநாதன் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் திருத்தணி போக்குவரத்து பணிமனையில் கோரிக்கை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருத்தணி அரசு போக்குவரத்து கழகத்தின் அலட்சியப்போக்கால் மிட்ட கண்டிகையைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் என அனைவரும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பேருந்தில் ஏறிச்செல்ல வேண்டி உள்ளது எனக் கூறி, நல்லாட்டூர் கிராமம் வரை இயக்கப்பட்டு வரும் இந்த பேருந்தை தொடர்ந்து, மிட்ட கண்டிகை வரை இயக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவலாங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, பூனி மாங்காடு வருவாய் ஆய்வாளர் முகமது யாசர் ரபாத் மற்றும் திருத்தணி அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post திருத்தணி அருகே அரசுப்பேருந்து சிறைபிடிப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,Mittak Kandigai village ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி