×

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்: அதிமுக ஆட்சியில் ரூ.300 கோடி ‘செக்’ பணமாக்கப்படவில்லை.! கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர் பரபரப்பு தகவல்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ரூ.300 கோடி காசோலைகள் வங்கியில் சமர்பித்து பணமாக்கப்படாமல் இருந்ததாக நிலை குழு தலைவர் தனசேகர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை வகித்தார், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசினார். இதைதொடர்ந்து நேரமில்லா நேரம் தொடங்கியது. இதில் கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர் பேசியதாவது: சென்னை மாநகரில் 3000 க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் மூலம் ரூபாய் 125 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் வசூல் செய்யப்படவில்லை. கடந்த கால ஆட்சியில் மாநகராட்சிக்கு பெறப்பட்ட காசோலைகள் ரூபாய் 300 கோடி அளவில் வங்கியில் போடப்படாமல் உள்ளது.

இந்த காசோலைகளுக்கு உண்டான பணத்தை வசூல் செய்தாலே மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். இதில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்தாவது மண்டலம் 28 வது வார்டில் ஆற்காடு சாலை வன்னியர் தெரு சந்திப்பில் 23 ஆயிரத்து 680 சதுர அடி மாநகராட்சி இடத்தை தனியார் ஆக்கிரமித்து உள்ளார். அதை அகற்ற வேண்டும். மாநகராட்சியில் உள்ள அம்மா அரங்கத்தில் உள்ள உள் அரங்கத்திற்கு கலைஞர் அரங்கம் என பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா: சோலார் கான்ட் ராக்ட் குறித்து பேசினீர்கள். அது, எலக்ட்ரானிக் துறையின் கீழ் வருகிறது. இது குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, அதற்கு பதில் இன்னும் வரவில்லை. கணக்கு துறை சம்பந்தமாக கூறினீர்கள். அது வருவாய் துறையின் கீழ் வருகிறது.

எனவே இது தொடர்பாக மாநகராட்சியும், வருவாய்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மதிமுக கவுன்சிலர் ஜீவன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது 1997-98ம் ஆண்டுகளில் 30 மழலையர் பள்ளிகளை தொடங்கினார். அப்போது இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர், ஆயாக்கள், காவலர் என்ற 3 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் பகுதிநேர ஊழியர்களாகவே நியமிக்கப்பட்டனர். பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின்பு நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது சென்னை முழுவதும் 250க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் உள்ளன. இதில் பணிபுரியும் 300 ஆசிரியர்கள், 200 ஆயாக்கள், காவலர்கள் என 500 பேர் பகுதிநேர ஊழியர்களாகவே பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வும், பணி நிரந்தரம் செய்யவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நீங்கள் செய்தால் உங்களை ‘பெண் கர்ணன்’ ஆகவே பார்ப்பார்கள். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா: இது மாநகராட்சிக்கு கீழ் வராது, கலெக்டர் அலுவலகத்துடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்களை , குறிப்பாக மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி என்ற திட்டம் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் ஆன்லைன் சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். அதன்படி சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடங்கள், கலையரங்குகள் தற்போது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவைகளை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்: அதிமுக ஆட்சியில் ரூ.300 கோடி ‘செக்’ பணமாக்கப்படவில்லை.! கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI MUNICIPAL COUNCIL ,DIPLOMATIC REGIME ,Account Standing Committee ,Danasekar Bharpur ,Chennai ,Chennai Municipal Corporation ,Danasekar Bharappu ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சி கூட்டத்தில்...